மேல புத்தேரி அருள்மிகு நயினார் யோகீஸ்வரர் கோயில்

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவிலிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள புத்தேரி என்னும் கிராமம் அமைந்துள்ளது. இவ்வூர் மேலபுத்தேரி என்றும் கீழபுத்தேரி என்றும் இருபகுதிகளாக விளங்குகிறது. மேலபுத்தேரி ஊரின் நடுநாயகமாக அமைந்துள்ளது இவ்வாலயம்.


சுவாமி    :    நயினார் யோகீஸ்வரமுடையார்

திருத்தலச் சிறப்புகள்:    ஏறத்தாழ ஒரு ஏக்கர் பரப்புள்ளள பிரகாரங்களுடன் அமைந்திருக்கும் ஆலயவளாகத்தில் நயினார் யோகீஸ்வரமுடையா சந்நதி பூலோவுடைய கண்டன் சாஸ்தா சந்நிதி பூதத்தான் சந்நிதி வழிபாட்டு மண்டபம் (பசனை மடம்) மற்றும் திருக்கோயில் கட்டடங்கள் ஆகியவை அமைந்துள்ளன. இவ்வாலயமும் அதைச்சார்ந்த சிற்றம்பலங்களும் பிறவும் மேலப்புத்தேரி வேளாண்குடியினரின் பொது நிறுவனமாகிய மேலப் புத்தேரி வெள்ளாளர் சமுதாயத்திற்கே உரிமையுடன் எண்ணரிய காலந்தொட்டு விளங்கி வருவனவாம்.

ஆலய வளாகத்தின் தென்மேற்குக் கன்னி மூலையில் பூலாவுடைய கண்டன் சாஸ்தா சந்நிதியும் இடப்பால் சுற்றுபிரகாரத்தில் பூதத்தான் சந்நதியும் அமைந்திருக்கின்றன. வடகிழக்காக ஈசான மூலையில் நயினார் யோகீஸ்வரமுடையார் சந்நிதி அமைந்துள்ளது. இரு சந்நதிகளுக்கும் இடையே வழிபாட்டு மண்டபமும் திருக்கல்யாண மண்டபமும் அமைந்துள்ளன.

தல வரலாறு : இவ்வாலயத்தின் தோற்றம் பற்றி காலச்சுவடுகள் எதுவும் இல்லை. ஆயினும் பல்வேறு தலைமுறையினரின் வாய்வழி வரலாற்றாலும் இடைகாலத்தே வாய்வழி வரலாற்றை அடியொற்றி எழுந்த தலபுராணங்கள் விளக்கும் செய்திகளாலும் இவ்வாலயம் தொன்மை மிக்கதொன்றாய் அறியப்படுகிறது.

   வெள்ளாளர் மரபில் தோன்றி அறவாழ்வு வாழ்ந்து துறவுநெறித் தலைப்பட்ட மாமுனிவர் ஒருவர் வாழ்ந்து வந்தார் எனவும் இவ்வூரின் வடமேற்கில் 1 கி.மீ தொலைவில் விஷ்ணுபுரம் என்னும் பெயருடன் இன்று விளங்கிய அரிஜனக்கிராமம் முன்பு இவ்வூரின் பெரும்பகுதியாக விளங்கியது. அப்பகுதியில் வாழ்ந்த வேளாண் குடிமக்கள் இம்மாமுனிவரின் மரபினராய் பக்தி நெறிபட்டு நின்றனர் என்றும் முக்கிய திருநாட்களில் முனிவரைக் கண்டு வழிபட்டு அவர்தம் வழிபடுகடவுளாம் சாஸ்தாவிற்கு உரிய முறையில் வழிபாடுகள் புரிந்து வந்தனர் எனவும் ஒருநாள் காலை முனிவர் சமாதி நிலையை எய்தினார் என்றும் செய்தி அறிந்த வேளாண் குடியினமக்கள் சமாதி ஏய்திய முனிவர் திருவடிகளை வணங்கிச் சென்றனர் எனவும் தானாக புற்று ஒன்று கிளர்ந்து எழுந்தது என்றும் பதினெட்டு அடி அளவில் புற்று வளர்ந்து உயரவே மழையாலும் பிறவாலும் இப்புற்று அழியாதிருக்க எண்ணிய பக்தர்கள் புற்றினைச் சுற்றி செங்கற்களால் உருவொன்று கட்டியமைத்து வழிபட்டுனர் என்று அறியப்படுகிறது.

தலப்பெயர் : புத்தேரி முமுனிவர் சமாதியைச் சூழ்ந்து புற்று எழுந்து ஏறி நின்ற பகுதி புற்றேறி என நாமகரணம் செய்யப் பெற்றிருக்க வேண்டும் என்றும் காலப்போக்கில் புற்றேறி என்ற சொல் புத்தேரி என்று மாற்றுருக் கொண்டிருக்க வேண்டும் என்றும் வழக்கு முறையால் அறியப்படுகிறது.

வழிபாடுகளும் - விழாக்களும் : நாடோறும் காலையும் மாலையும் இத்திருக்கோயில்களில் முறையே தீபாராதனை வழிபாடுகள் நிகழ்கின்றன. திங்கள் தோறும் வருகின்ற சமய வழிபாட்டு நாட்களிலும் இறைவழிபாட்டு சிறப்பு நாட்களிலும் சிறப்பான சடங்குகளுடன் வழிபாடுகள் நடைபெறுகின்றன. சனிக்கிழமை தோறும் வழிபாட்டு மண்டபத்தில் பக்தர்கள் கூடி பசனைப் பாடல்களை பாடி சிறப்பு நிகழ்ச்சி செய்து வழிபடுவது முறையாக நிகழும் ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை திங்கள் முதல்நாளிலிருந்து மார்கழித் திங்கள் வரை ஒவ்வொரு நாளும் வெள்ளாளர் சமுதாய உறுப்பினர்கள் முறையாக இத்திருக்கோவிலில் சிறப்பு வழிபாடு புரிவர்.

ஆண்டுதோறும் பங்குனி திங்கள் உத்திரநாளில் நடைபெறும் சாஸ்தாகோவில் கொடைவிழா சிறப்பான ஒரு நிகழ்ச்சி. இவ்விழா இரு நாட்களாக தம்பிரான் குதிரை வாகன பவனி மற்றும் நிகழ்ச்சிகளுடன் சிறப்புற நிகழும் இவ்விழாவைத் தொடர்ந்துவரும் வெள்ளிக்கிழமை தொடர்ந்துவரும் வியாழனன்று குருநாதரசம் யோகீஸ்வரருக்கு அன்னக்கொடை புரிந்து குருபூசை செய்து மறுநாள் வெள்ளியன்று புற்றாக விளங்கும் குருநாதர் சமாதியை முற்றுமாக செம்மண் பூசும் திருமேனி பூசும் விழாவும் இரவு கொடைத்திருவிழாவும் இத்திருக்கோவில் ஆண்டுத் திருவிழாக்கள் ஆகும்.

இக்கோவிலின் முக்கியப் பிரசாதம் புற்று மண்ணாகிய செம்மண்ணேயாகும். தீராத நோயினையும் தீர்த்திடும் ஆற்றல் இப்புற்று மண்ணிற்கு உண்டு என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை.

அருகிலுள்ள விமானதளம்    :    திருவனந்தபுரம்
ரயில் நிலையம்            :    நாகர்கோவில்
பஸ் வசதி            :    உண்டு
தங்கும் வசதி            :    உண்டு
உணவு வசதி :    உண்டு
===============================================================

SSL Certificate