தியாகி திரு பி.எஸ்.மணி

தியாகி திரு பி.எஸ்.மணி

    மாணிக்கமாக இருந்தாலும் எல்லா மாணிக்கங்களும் மகுடம் ஏறுவதில்லை. முத்துக்களேயானாலும் எல்லா முத்துக்களும் மாலையாகி மதிப்புப் பெறுவதில்லை. அம் மாதிரிப்பட்ட உயர்ந்த நிலையை இடத்தைப் பெறுவதற்கு ஒரு அதிர்ஷ்டம் வேண்டுமோ என்று எண்ணுவதற்கு சில மாணிக்கங்களையும் முத்துக்களையும் காணும்போது தோன்றுகிறது.
    இப்புனித மண்ணில் எண்ணற்ற தியாகிகள் தோன்றியுள்ளார்கள். அவர்களில் வானளாவப் புகழ் பெற்றவர்களும் உண்டு வணங்கத்தக்க நினைவாலயங்களைப் பெற்றவர்களும் உண்டு. ஒசைபரவாமலே உரிய இடத்தைப் பெறாமலே மறைந்த மாமனிதர்களும் உண்டு.
    தியாகி பி.எஸ்.மணி இம்மண்ணில் தோன்றி சுதந்திர போராட்டக்களத்திலும் மொழி இனப் போராட்ட வேள்வியிலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்து தக்கப்படி போற்றப்படாத ஒரு போராட்ட வீரர்.
    அவருடன் நெருங்கிப் பழகியவர்களால் அண்ணாச்சி என்று அன்புடன் அழைக்கப்பட்ட தொண்ணூற்றைந்து வயது வரைக்கும் கொள்கைப் பிடிப்புடன் வாழ்ந்தச் செம்மல்.
    இவர் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு பன்முறை சிறை சென்றவர். வாழ்க்கையில் தியாகம் செய்தவர்கள் உண்டு. ஆனால் தியாகத்தையே வாழ்க்கையாக மாற்றியவர் மணி அண்ணாச்சி என்றால் அது மிகையல்ல.
    தவறு எங்கு கண்டாலும் எவர் செய்தாலும் உடனேயே கண்டித்து பேசுவதிலும் தனது பத்திரிகையுமான கன்னியாகுமாரி எழுதுவதிலும் மிகவும் துணிச்சல் மிக்கவர். தமிழரசுக் கழகத்தலைவர் சிலம்பு செல்வர். ம.பொ.சி. அவர்களின் மிக நெருங்கிய நண்பர். அவர்களால் தெற்கெல்லைத் தளபதி என்று பாராட்டப் பெற்றவர். மணி அண்ணாச்சி அவர்களே!
    எவரிடமும் எந்த சலுகையையும் எதிர்பார்க்காமல் தாங்கள் தலைநிமிர்ந்து நடந்தாற்ப்போன்று தங்கள் பத்திரிகையும் தலைநிமிர்ந்தே நடந்தது. இந்த உண்மை குமரிமாவட்டம் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் கண்ட வெளிச்சம். நாடு சுதந்திரம் பெற்றதும் இதுவே போதும் என்று சும்மா இருந்து விடவில்லை . அன்றைய திருவிதாங்கூர் மாநிலத்தோடு (இன்றைய கேரளா) இணைந்திருந்த தமிழ்ப் பகுதிகளைத் தாய்த் தமிழகத்தோடு சேர்ப்பதற்காக திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் என்ற திருப்பெயருக்கு வித்திட்டவர்.
    அவருடன் இணைந்து போராடிய தியாகிகள் தாணுலிங்கநாடார் ஸ்ரீ.வி.தாஸ் காந்திராமன் பிள்ளை சு.மு.ராம்சாம்நத்தானியேல் போன்றவர்கள்  தன்னை தன் குடும்பத்தை தன்னுடையதும் தன் துணைவியாருடையதும் சொத்துக்களையும் இழந்து மக்களால் சூட்டப்பட தியாகி என்ற கிரீடத்தை மட்டும் பெற்றுக் கொண்டார்!
    சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு பன்முறை சிறை வாசம் அனுபவித்ததோடு காங்கிரஸ் பேரியக்கம் நடத்திய அரசின் சேவாசங்கம் நூல் நூற்புக் கழகம் அன்னியத்துணி புறக்கணிப்பு போன்ற அத்தனை போராட்டங்களிலும் கலந்து பல்வேறு துன்பங்களையும் மனமார ஏற்றுக் கொண்டவர்.
    தனது நண்பர்களுடன் 1943-ல் நாஞ்சில் நாட்டு வாலிபர் மத்திய சங்கம் என்ற பெயரில் ஒரு சங்கம் நிறுவினார்.
    பாரத சுதந்திரத்திற்குப் பிறகு 1945ல் இருந்தே திருவிதாங்கூரில் உள்ள தமிழ்ப் பகுதிகள் மலையாள ஆதிக்கத்திலிருந்து தாய்த் தமிழகத்தோடு இணைக்கக் கோரி கடுமையான போராட்டங்கள் நடந்தன.
    அந்த வேளையில் மணி அவர்கள் தமிழர்களுக்கென நாஞ்சில் தமிழர் காங்கிரஸ் என்ற பெயரில் ஒரு இயக்கத்தை அமைக்க துண்டுப்பிரசுரங்கள் வெளியிட்டார். அதன்பிறகு நண்பர்களுடன் வழக்கறிஞர் திரு. பி.சிதம்பரம் பிள்ளையை சந்தித்து ஆலோசனைக் கேட்டார். அவர்கள் ஆலோசனைப்படி நாஞ்சில் தமிழர் காங்கிரஸ் என்ற பெயர் மாற்றப்பட்டு அகில திருவிதாங்கூர் தமிழர் காங்கிரஸ் என்றாகியது. பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் ஆகியது.
    இதன் முதல் தலைவர். திருவாளர். வழக்கறிஞர் சாம் நத்தானியல் அவர்கள். 1946 ஜூன் 30-ம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் திரு. தமிழ்நாடு காங்கிரஸ் புத்துயிர் பெற்றது! தொடர்ந்து தாய்த் தமிழக இணைப்பு போராட்டம் வேகம் கொண்டு எழுச்சி பெற்றது.
    தியாகி காந்திராமன் பிள்ளை தலைமையில் நீதிமன்ற மறியல் போராட்டம் கூட்டம் நடந்தது. எல்லா போராட்டங்களிலும் தியாகி மணி அவர்கள் பங்கு பெற்று பல துயரங்களையும் சிறைவாசத்தையும் ஏற்றுக் கொண்டார். போராட்டங்களும் தியாகங்களும் உயிர் இழப்புக்களும் வீண் போகவில்லை.
    1956-ல்  தாய்த் தமிழகத்தோடு இணைந்தது. இணைப்பு விழா சிறப்பாக நடந்தது.
    8-1-1958-ல் குமரிமாவட்ட எழுத்தாளர்களை ஒருங்கிணைந்த எழுத்தாளர்களுக்கென ஒரு சங்கம் அமைக்க வெண்டும் என்று திட்டமிட்டார் மணி அவர்கள். தியாகி பி. தாணுலிங்க நாடார் அவர்கள் தலைமையில் முதற்க் கூட்டம் நடைபெற்றது.. தியாகி மணி தேவி இதழ் அசிரியர் ட.மகாலிங்க முதலியார் ஆ.நாகப்பன் தியாகி கும்பலிங்கம் பிள்ளை முனைவர் தே.வேலப்பனார் புதலிங்கம் சுந்தர ராமசாமி ஆகிய ஓன்பது எழுத்தாளர்களுடன் முதற்கூட்டம் ராஜா ஸ்டுடியோ கலை அரங்கில் நடைபெற்றது. அதன் வளர்ச்சிக்கு மணி அண்ணாச்சி உட்பட ஒன்பது பேர்களும் உழைத்தார்கள்.
    இவ்வாறு அரசியலில் மட்டுமின்றி இலக்கியத்திற்காகவும் தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த மணி அண்ணாச்சி அவர்கள் தனது 95-ம் வயதில் காலமானார்.
    இன்று எழுத்தாளர்கள் உள்ளத்திலும் நன்றியுள்ள அரசியல் தலைவர்கள் அகத்திலும் மக்கள் நெஞ்சிலும் நிரந்தரமாக வாழ்கிறார்.

SSL Certificate