
S.S. பிள்ளைBack to List

நாம் கொண்டாட வேண்டிய தமிழ் கணிதவியலாலர்களில் ஒருவர் சுப்பையா சிவசங்கரநாராயண பிள்ளை அல்லது எஸ்.எஸ்.பிள்ளை [S.S.Pillai].
இருபதாம் நூற்றாண்டின் சிறந்த இந்தியக் கணிதவியலாளரில் ஒருவர். எண் கோட்பாட்டில் பல நிபுணர்களின் கவனத்தை ஈர்த்த வாரிங் பிரச்சினையில் அவருடைய சாதனை மிகப்பெரிதாகப் பேசப்படுகிற ஒன்று. இந்தியா அவருடைய அகால மரணத்தினால் இன்னும் பல சாதனைகள் புரிந்து நாட்டுக்குப் புகழ் சேர்க்கக்கூடிய ஒருவரை இழந்தது.
திருநெல்வேலி மாவட்டத்தில், குற்றாலத்திற்கருகிலுள்ள வல்லம் என்ற சிற்றூரில் பிறந்தார். அவருக்கு ஒரு வயது ஆகுமுன்பே தாயார் கோமதி அம்மாள் காலமாகிவிட்டார். தந்தை சுப்பையா பிள்ளை தான் வயதான உறவினப் பெண்மணி ஒருவரின் உதவியுடன் குழந்தையை வளர்த்தார். செங்கோட்டை நடுத்தரப்பள்ளியில் பையன் படிக்கும்போதே சாஸ்திரியார் என்ற ஒர் ஆசிரியர் இவருடைய புத்தி வல்லமையையும் உழைப்பையும் பார்த்துப் பூரித்துப் போனார். இவருடைய பள்ளிப்படிப்பு முடிவதற்குள்ளேயே சுப்பையாபிள்ளை காலமானபோது, அவர்தான் சிவசங்கரநாராயணனின் கல்லூரிப் படிப்பிற்கு உதவிசெய்தார்.
இடைநிலைக் கல்வி பயின்றது நாகர்கோயிலில் உள்ள ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியில். திருவனந்தபுரம் மஹாராஜா கல்லூரியில் கல்விச் சலுகை பெற்று நன்றாகவே படித்து B.A. பட்டம் பெற்றார். மேற்படிப்பிற்காக சென்னைக்குச் சென்றார்.
சென்னை மாகாணக் கல்லூரியில் 1927 இல் ஆனந்தராவின்கீழ் ஆராய்ச்சி மாணவனாகச் சேர்ந்து முதல்தர ஆராய்ச்சி மாணவன் என்று பெயர் எடுத்தார். ஆனந்தராவுடன் கூட பேராசிரியர் வைத்தியநாதசுவாமியும் இவருக்கு வழிகாட்டினார். சென்னைப் பல்கலைக்கழகம் இவருடைய ஆராய்ச்சிகளைப் பாராட்டி இவருக்கு D.Sc. பட்டமே வழங்கியது.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதல் D.Sc. இவர்தான்.
சாதனைகள்:
76 ஆய்வுக்கட்டுரைகள் எழுதினார். அவை பெரும்பாலும் எண் கோட்பாட்டைப்பற்றியும் டயோபாண்டஸ் தோராயத்தைப் பற்றியும் இருந்தன.
1) வாரிங் பிரச்சினையில் கண்டுபிடிப்பு எண் கோட்பாட்டில் வாரிங் பிரச்சினையைப் பற்றிய ஒரு முக்கியமான கண்டுபிடிப்பைச் செய்து சரித்திரம் படைத்தார். 1909இல் டேவிட் ஹில்பர்ட் வாரிங் பிரச்சினையைப் பற்றிய ஓர் அடிப்படைத் தேற்றத்தை நிறுவினார்.
ஹில்பர்ட்-வாரிங் தேற்றம்: ஒவ்வொரு நேர்ம முழு எண் k க்கும் g(k) என்ற ஒரு மீச்சிறு நேர்ம முழு எண் கீழுள்ள பண்புடன் இருக்கும்: எந்த நேர்ம முழு எண்ணையும் g(k) எண்ணிக்கை கொண்ட k - அடுக்குகளின் கூட்டுத் தொகையாகக் காட்டலாம். அதாவது, எத்தனை குறைந்த எண்ணிக்கை கொண்ட k-அடுக்குகளின் கூட்டுத்தொகையாக எல்லா முழுஎண்களையும் சொல்லமுடியுமோ அந்த எண்ணிக்கை g(k)யாகும்.
பிள்ளை பகா எண்கள்:
அவர் கண்டுபிடித்த ஒருவித பகா எண்களுக்கு பிள்ளை பகா எண்கள் என்ற பெயர் நிலைத்துவிட்டது. எர்டாஷ், சுப்பராவ், ஹார்டி முதலியவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். எழுதியது: Sakthikkumaran Vijayaraghavan
திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை அருகேயுள்ள குக்கிராமம் வல்லம். இக்கிராமத்தில் தான், உலகமே இன்று குழப்பம் இன்றி கணிதத்தில் சாதிக்கும் கொண்டிருக்கும் சூத்திரத்தினை கண்டுபிடித்த எஸ்.எஸ் பிள்ளை என்ற சிவசங்கரபிள்ளை பிறந்தார். நடுத்தர குடும்பத்தில் பிறந்த இந்த மாமேதையால்தான் இந்தியா உலக அரங்கில் புகழ் பெற்றது.
திருவாங்கூர் சமஸ்தனத்தில் திவானாக இருந்த சிபி ராமசாமி ஐயருக்கு டாக்டர் சிவசங்கர நாராயணபிள்ளையை (டாக்டர் எஸ்எஸ் பிள்ளை) தன்னுடைய திருவாங்கூர் சர்வகாலசாலைக்கு ஆசிரியராக கொண்டு வர வேண்டும் என்று தீராத ஆசை.
டாக்டர் எஸ்எஸ் பிள்ளை கணித ஆராய்ச்சியில் மேதை மட்டுமல்ல. அசகாய சூரர். ஸ்ரீநிவாச ராமானுஜத்துக்கு பிறகு எண் கணிதத்தில் புகழ் பெற்று விளங்கியவர்.
முந்நூறு வருஷங்களாக தீர்க்க முடியாமல் இருந்த கணித மேதைகளையெல்லாம் திக்குமுக்காட செய்த வாரிங்ஸ் அனுமானம் என்ற புதிரை விடுவித்ததோடு அதற்கு விடையும் கண்டவர்.
இவ்வளவு திறமை வாய்ந்த இளம்மேதையை எப்படியும் தன்னுடைய சர்வகாலசாலைக்கு கொத்திக் கொண்டு வந்து விடவேண்டும் என சர். சிபி ராமசாமி ஆசைப்பட்டு தீவிரமாக முயற்சி செய்தார்.
ஆனால் டாக்டர் எஸ்எஸ் பிள்ளையின் எண்ணமோ வேறு விதமாக இருந்தது. தன்னுடைய எண் கணித ஆராய்ச்சிக்கு அண்ணாமலையின் அமைதியான ஆக்ஸ்போர்டு சூழ்நிலை அவருக்கு ரொம்பவும் பிடித்துப் போயிருந்தது. வாரிங்ஸ் அனுமானத்திற்கு விடை கண்டு, அதன் மூலம் உலக புகழ் பெற்றதெல்லாம் இந்த சூழ்நிலையின்தான்.
படிப்பதற்கு புத்தகங்களும், பழகுவதற்கு அறிஞர்களும் அங்கு அதிகமாக இருப்பதால் அவருக்கு அண்ணாமலையை விட்டு வர மனமில்லை.
எஸ்எஸ் பிள்ளையின் குடும்பமோ நடுத்தரத்திற்கும் சற்று குறைவான குடும்பம். அதே நேரத்தில் அவர் சங்கோஜப் பிறவியும் கூட. கடின உழைப்பும், எண் கணிதமுமே அவர் கண்ட உலகம். இவரை ஒரு கட்டுபாட்டிக்குள் வைத்திருப்பது புயலை பெட்டிக்குள் வைத்திருப்பது போல.
ஒரு சமஸ்தானத்து திவானே வெத்திலை பாக்கு வைத்து அழைக்கும்போது வருவதற்கு என்ன. படிச்சிருந்து என்ன செய்ய, என்று அவருக்கு வேண்டியவர்கள் எல்லாம் மிகவும் சங்கப்பட்டார்கள். பிறகு எப்படியோ செங்கோட்டையில் உள்ள பெரிய மனிதர்களும், உறவினர்களும் ஒன்று சேர்ந்து அண்ணாமலைக்கு வந்து ஒரு முற்றுகை போராட்டமே நடத்தி பிள்ளையை சம்மதிக்க வைத்து விட்டார்கள்.
ஒரு வழியாக 1940-41-ல் டாக்டர் எஸ்எஸ் பிள்ளை திருவனந்தபுரம் வந்து வேலையில் சேர்ந்தார்.
டாக்டர் பிள்ளையின் வாழ்க்கை தொடங்கிற்று. இவர் வேலைக்கு சேர்ந்த மறுவருஷம், வடநாட்டில் நடந்த சயின்ஸ் காங்கிரஸூக்கு இவரை விட்டு விட்டு இன்னொருவரை திருவாங்கூர் சர்க்கார் தேர்ந்தெடுத்து விட்டது.
சர்.சி.பி வெளிநாடு போயிருந்தபோது இது நடந்தது. அவ்வளவுதான், டாக்டர் பிள்ளை உடனே வேலையை ராஜினமா செய்துவிட்டு திவானுக்கு ஒரு காகிதத்தை மாத்திரம் எழுதி தபாலில் போட்டு விட்டு செங்கோட்டை ரயில் ஏறி விட்டார்.
இதை அறிந்த டாக்டர் பிள்ளையின் நண்பரும், ஜெர்மனிய நாட்டு கணித மேதையுமான டாக்டர் எப்.டபிள்யு லெவின் தான் வேலை பார்த்துக் கொண்டிருந்த கல்கத்தா சர்வகாலசாலைக்கு அவரை அழைத்துக் கொண்டார்.
அப்போதைய துணை வேந்தர் சியாம பிரசாத் முகர்ஜியும் டாக்டர் பிள்ளைக்கு முழு சுதந்திரம் கொடுத்து ஆதரித்தார். சர்வதேச கணித அமைப்புகள் இவருடைய ஆராய்ச்சியை போற்றிப் புகழ்ந்தன.
கணித உலகெங்கும் இவருடைய பெயர் பிரபலமடைந்தது. டாக்டர் எஸ்எஸ்பிள்ளையின் எண் கணித கோட்பாடு (Dr. S.S. Pillai's Theory of Number) என்றே ஒரு சூத்திரமும் கணிதயியலில் நிரந்தரம் ஆகிவிட்டது.
ராமானுஜத்தை பற்றி ஹார்டி எழுதிய 12 வால்யூம் உள்ள புத்தகத்தில், ஒரு வால்யூம் இவரை பற்றி எழுதினார். இப்படி புகழின் உச்சியில் டாக்டர் எஸ்எஸ்பிள்ளை இருக்கும்போது சான்பிரான்சிகோ கணித மாநாட்டில் தலைமை தாங்க அழைப்பு வந்தது. அழைப்பை ஏற்று டாக்டர் பிள்ளை விமானத்தில் அமெரிக்கா செல்லும் போது, விதி விளையாடி விட்டது.
1950 ஆகஸ்ட் 31-ம் தேதி கெய்ரோவிலிருந்து கிளம்பி எகிப்து பாலைவனத்தின் மேல் பறந்து கொண்டிருந்த போது விபத்துக்குள்ளாகி எரிந்து சாம்பலானது. அந்த விமானத்தில் பயணம் செய்த புகழ் பெற்ற ஒரு கணித மேதையின் வாழ்வு முடிந்துவிட்டது.
டாக்டர் பிள்ளையை நினைக்கும் போதெல்லாம் நேச்சர் என்ற உலகப் புகழ் பெற்ற இதழில் டாக்டர் இ.டி பெல் என்ற மேல்நாட்டு மேதை எழுதிய உலகப் புகழ் பெற்ற சாதனைகளை செய்தவர் டாக்டர் எஸ்எஸ் பிள்ளை என்ற வரிகள் நினைவுக்கு வருகின்றன. அவர் பிறந்த செங்கோட்டையில் டாக்டர் எஸ்எஸ் பிள்ளை தெரு என்ற பெயர் பலகையை பார்க்கும் போதெல்லாம் அந்த அறிஞரின் சாதனை நமக்கு பெருமை சேர்க்கின்றன.
இப்போது கணித மேதை எஸ்எஸ் பிள்ளை பிறந்த குக்கிராமமான செங்கோட்டை தாலுகா வல்லத்தில் இவர் வாழ்ந்த வீடு பராமரிப்பின்றி பாழடைந்து போய், தற்போது யாரோ சிலரின் ஆக்கிரமிப்புக்கு உட்பட்டுள்ளது.
கணித மேதை எஸ்எஸ் பிள்ளை வீரவாஞ்சிநாதனோடு கை கோர்த்து கலெக்டர் ஆஷ்துரையை சுட்டு கொலை செய்ய திட்டம் தீட்டிய சாவடி அருணாச்சலம் பிள்ளையின் உறவினர் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- IAS Academy உணவு வகைகள் அவசர உதவி குழு Free ADS Donate Blood மக்கள் இயக்கம் நம்மவர்கள் எழுதிய புத்தகங்கள் சமுதாய நடுவர் தீர்ப்பாயம் நாஞ்சில் மலர்
- About Us About Founder Text Message Video Message Announcements Community-News
- ஆலோசனை ஏன் கல்வி ஆலோசனை சட்ட ஆலோசனை மருத்துவ ஆலோசனை திருமண ஆலோசனை வேலை வாய்ப்பு ஆலோசனை கலாசார வழிமுறை ஆலோசனை அரசு வரி ஆலோசனை
- View Resume Submit Resume Photo Gallery Video Gallery
- போற்ற வேண்டிய பெரியோர்கள் ஒளிரும் வைரங்கள் சேவை செம்மல்கள் இன உணர்வூட்டும் எழுச்சிகள் சமுதாய கோயில்கள்
All Rights Reserved. © Copyright 2020 NanjilVellalar.com
Powered by :Brilliant ID Systems