Welcome to Nanjil Vellalar Community     |     Welcome to www.nanjilvellalar.com     |     Welcome to Nanjil Vellalar Community     |     Welcome to www.nanjilvellalar.com     |     Welcome to Nanjil Vellalar Community     |     Welcome to www.nanjilvellalar.com
Flash News »
நாஞ்சில் வெள்ளாளர் [அல்லது] நாஞ்சில் வேளாளர் எது சரி ? => விளக்கம் => News & Events=> Community News - ல் காண்க.

நாஞ்சில்நாட்டு வெள்ளாளர்களின் சடங்குகளும் சம்பிரதாயங்களும்

பூப்புனித நீராட்டு (ருது விசேஷம்)

பெண் ருதுவானவுடன்  செய்ய வேண்டிய சடங்குகள் :
ஒரு பெண் குழந்தை ருதுவானது கண்டதும் (வயதுக்கு வருதல் எந்த நேரத்திலும் வரலாம்) முதலில் நாள், நட்சத்திரம், நேரம் இவற்றைக் குறித்துக் கொள்ள வேண்டும். பின் தனியாக அப்பெண்ணை ஒரு அறையிலோ அல்லது பாதுகாப்பாக ஒரு இடத்தில் கையில் இரும்பாலான சாவி அல்லது ஏதோ ஒரு இரும்புத்துண்டை கையில் வைத்துக்கொள்ளுமாறு செய்யவும், அதன்பின் உறவுகளுக்குச் சொல்லி அவர்கள் வந்தவுடன் நேரம் பார்த்து குழந்தையின் அப்பாவுடைய அம்மா, அக்கா அல்லது தங்கை (அத்தை) யாராவது ஒருவர் அல்லது அம்மாவழி ஆச்சி  குழந்தைக்கு தலைக்கு தண்ணீர் ஊற்றும் வைபவம் நடைபெறும். முதலில் மேற்சொன்னவர்கள் ஒரு சுத்தமான சொம்பில் மூன்று முறை தலையில் தண்ணீர் ஊற்றவும். அதன்பின் ருதுவான பெண்ணே குளித்துக் கொள்ளவும். குளிக்கும்போது மஞ்சள் பூசிக் குளிக்க வேண்டும்.
    குளித்து முடித்தவுடன் தாய்மாமன் அவர்கள் எடுத்துக் கொடுக்கும் புதுத் துணியை (தாய்மாமன் ருதுவான பெண்ணிற்கு முதன்முதலில் புதுத்துணி எடுத்துவர வேண்டும்). உடுத்தியபின் அவள் எந்த அறையில் இருந்தாளோ அல்லது சுத்தம் செய்து கிழக்குப் பார்த்து உட்கார வைக்கவேண்டும். பின் விளக்கு ஏற்றி விளக்கின் முன் வெற்றிலைப் பாக்கு, பழம், தேங்காய், பூ வைத்து, அதனுடன் ஒரு டம்ளரில் சந்தனம் கரைத்து குடிக்க வைக்கவும்  குழந்தைக்கு இப்போது குடிப்பதற்கு ஏதேனும் (பழரசம், பால்) எப்போதும் இரும்பு (உலோகம்) துண்டு கையுடனேயே இருப்பது முக்கியம். பின்னர் அவரவர்கள் விருப்பப்படி குழந்தைக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவு (மாவு, களி, முட்டை, பால், உழுந்துச்சோறு) உணவு வகைகளை கொடுத்து 16-வது (நல்ல நாள் பார்த்து) நாள் சடங்கு செய்வது நல்லது. 2-ம் தீட்டு வருவதற்கு முன் செய்வது சாலச்சிறந்தது. ருதுவான நாள் முதல் சடங்கு நடக்கும் நாள்வரை விடாது தினமும் விளக்கு ஏற்றவேண்டும். அதுவரை விளக்கு பூசக்கூடாது 3-ம் நாள் படைத்த தேங்காய் பழங்களை எடுக்க வேண்டும்.

சடங்கு செய்தல்
சடங்கிற்கு அய்யர் வைத்து நாள் குறித்து பின்னர் சடங்கன்று விளக்கு ஏற்றி விளக்கிற்குண்டான மாலை வெற்றிலைப் பாக்கு, பழம், தேங்காய் முதலியவற்றுடன் மஞ்சளில் பிடித்த பிள்ளையார் இலையின் வலதுஓரம் வைக்கவேண்டும். நிறைகுடம் தண்ணீர் வைக்க வேண்டும். அந்த குடத்தை அய்யர் பூஜை செய்து, அந்த புனித நீரை அய்யர் குழந்தையின் தலைமீது ஊற்றுவார். அதன்பின் தாய் மாமன் மனைவி மேளதாளத்துடன் எடுத்துக் கொண்டு வரும் பட்டுப்புடவை மற்றும் அதனுடன் சேர்ந்து சீப்பு, கண்ணாடி, சோப்பு, பவுடர், ரிப்பன்,  வளையல், வெற்றிலைப் பாக்கு, பழவகைகள் மற்றும் பூமாலையுடன் வரும் சீர் தாம்பாளத்தை மாமாவும், அத்தையும் ஜோடியாக கொடுக்க வேண்டும். பின் அத்தையானவள் குழந்தையை கூட்டிக்கொண்டு போய் அலங்காரம் செய்து பின் திருவிளக்கின் முன்வைத்து தாய் மாமன் அவள் கழுத்தில் மாலை அணிவிக்க வேண்டும். அத்தையானவள் குழந்தையை மணையில் உட்காரவைக்க வேண்டும். அதன்பின் குழந்தையின் ஆச்சி (பாட்டி)யை பக்கத்தில் உட்காரவைத்து மாப்பிள்ளை சடங்கு செய்வார்கள். அதாவது திருமணம் போல் நடத்தப்படும். ஆச்சியானவள் மாப்பிள்ளை போலவும் ருதுவான பெண், பெண் போலவும் பாவித்து, மாப்பிள்ளையான ஆச்சிக்கு உறுமா கட்டப்பட்டு, பின் ருதுவான பெண் மாலை போடவேண்டும். ஆச்சியானவள் ருதுவான பெண்ணிற்கு சந்தனம், பன்னீர் தெளித்து குங்குமம், பூ வைப்பார். இருவரும் மாலை மாற்றிக்கொள்ள வேண்டும். பின் அத்தையானவள் ஏற்றி இறக்கவேண்டும். விளக்குமுன் இருக்கும் நிறைநாழி நெல்லையும், தேங்காயையும் அல்லது சந்தனக்கும்பா, பன்னீர் சொம்பு இவைகளில் ஏதேனும் ஒன்றை இரண்டு கைகளிலுமாக பின்புறம் குழந்தையின் சொந்தக்கார சுமங்கலியொருவர் தொடும்படியாக மூன்று முறை செய்யவேண்டும். அதன்பிறகு அடை பொரியும் கலந்து திருஷ்டி சுற்ற நான்கு திசைகளிலும் போடவேண்டும். ஆச்சியானவள் குழந்தைக்கு பால் பழம் கொடுப்பார். அதன்பின் குழந்தையின் தாயும் தகப்பனும் விபூதி பூசி ஆசீர்வாதம் செய்வார்கள். அதன்பின்  மாப்பிள்ளை கோல ஆச்சியிடம் தட்டில் சுருள்பணம் வெற்றிலைப்பாக்கு கொடுத்து அவர்களை எழுந்திருக்க சொல்ல வேண்டும். பின் உறவினர் அனைவரும் குழந்தைக்கு விபூதி பூசி ஆசீர்வாதம் செய்வார்கள். பின் அனைவருக்கும் விருந்து படைத்து சந்தனம் குங்குமம்  கொடுத்து சடங்கு நிகழ்ச்சி இனிதே நிறைவுபெறும்.

நிச்சயதார்த்தம் (எனும் பரிசம்)

1)    வெற்றிலை கைமாறுதல்
இருவீட்டார் சம்மதத்துடன் பெண் பார்க்க மணமகனாகப் போகும்
பையனின் வீட்டினர் வருகை தரும் சம்பிரதாயம் பெண் வீட்டார் நல்ல நாள் பார்த்து முதலில் மஞ்சள் குங்குமம் போன்ற பூஜைக்குரிய சாமான்கள் வாங்கி வைத்து, அதனோடு 7 வகை அல்லது 9 வகை பழங்கள் இரு தட்டில் நிறைத்து வைக்க வேண்டும். விளக்கு ஏற்றி விளக்கில் மேலிருந்து கீழாக பூமாலை (பூச்சரம்) போடவேண்டும். விளக்கின் முன் நிறை நாழி, நெல், பன்னீர் சொம்பு, சந்தனக்கும்பா,குங்குமச் சிமிள் முதலியன வைத்து தீபம் ஏற்றி கற்பூர ஆரத்தி காண்பித்து தாயும் தகப்பனும் குலதெய்வத்தை வேண்டிக் கொள்ளவேண்டும்.
தட்டில் வைக்கும் பழங்கள் ஃ மற்றும் இனிப்பு பதார்த்தங்கள்
முதலில் மஞ்சள், குங்குமம், பூ, வெற்றிலை பாக்கு மஞ்சள் தடவிய தேங்காய் இரண்டு வைத்துவிட்டு பின்
    1.    செந்துளுவன்   
    2.    ஆப்பிள்
    3.    பேரீச்சம்பழம்
    4.    சாத்துக்குடி
    5.    மாதுளை
    6.    கல்கண்டு
    7.    மாம்பழம்
    8.    சாக்லேட்
    9.    திராட்சை ஃ பச்சை அல்லது உலர்ந்தது.
    மேற்படி வகைகளை பிரித்து இரண்டு தட்டிலும் வைக்க வேண்டும்;. பிறகு இரு வீட்டார் தாய் மாமன்களும் (பெண்ணின் தாய் மாமன் - மாப்பிள்ளையின் தாய்மாமன்) பரஸ்பரம் சந்தனம், குங்குமம் பூசி மாலை மாற்றிக் கொள்ள வேண்டும். பின் தாம்பூலத் தட்டு மாற்றி - உறுதிப்படுத்தி விருந்து பரிமாற வேண்டும்.
நிச்சய தாம்பூலம்

    வெற்றிலை மைகமாறும் நிகழ்ச்சி போலவே நிச்சய தாம்பூல நிகழ்ச்சியும் நடைபெறும். பெண்ணிற்கு பட்டுப்புடவையுடுத்தி அலங்காரம் செய்து மாலை அணிவித்து பரிசம் போடுவார்கள் மேலே கூறியபடி இரண்டு தட்டுகளில் வெற்றிலை, பாக்கு பழங்கள், பூவுடன் சேர்த்து ஒவ்வொரு தட்டிலும் சார்த்து எனப்படும் நிச்சயதாம்பூல பத்திரிகை வைக்கப்படும். சார்த்தின் நான்கு புறங்களிலும் மஞ்சள் தடவவேண்டும். சார்த்தில் இன்னார் குடும்பத்து பையனுக்கும் இன்னார் குடும்பத்து பெண்ணிற்கும் நல்ல நாள்பார்த்து எந்த இடத்தில் திருமணம்
நடைபெறும் என்றும், என்னென்ன முறையில் திருமணம் நடத்துவது என்ற ஒப்பந்தப்பத்திரம் தான் சார்த்து எனப்படுவது.

    அக்கா அல்லது தங்கை இவர்களில் ஒருவர் கூட்டி வந்து பின் மணப் பெண்ணை விளக்கின் அருகே உட்கார வைப்பார்கள். பிறகு அவர்கள்

3 அல்லது 5 தாம்பூலத் தட்டுகளில் (தேங்காய் வெற்றிலை பாக்கு பழம்,
பூ, அடக்கம்) ஒரு தட்டில் நிச்சயதார்த்த பட்டு, பாவாடை, ஜாக்கெட், பூமாலை,  குங்கும சிமிழ், சந்தனம் எல்லாம் அடங்கிய தட்டை பெண்ணிடம் கொடுத்து (தேங்காயில் மஞ்சள் தடவியிருக்க வேண்டும்). அவளை உடுத்தி வரும்படி செய்ய வேண்டும்.

பெண் புதிய நிச்சயதாம்பூல பட்டுப்புடவை உடுத்தி வந்ததும் விளக்கின் முன் அமரச் செய்யவேண்டும். பிறகு மாப்பிள்ளையின் சகோதரி பெண்ணிற்கு பன்னீர் தெரித்து, பு, பொட்டு வைத்து அதன்பிறகு பரிசம் போட வேண்டும் (செயின்) பின் கொண்டுவந்த தாம்பூலத்தட்டை ஒவ்வொருவராக பெண்ணிடம் கொடுக்க வேண்டும். அதன்பின் பெரியவர்கள் நிச்சயித்த பெண்ணிற்கு விபூதி பூசி ஆசீர்வாதம் செய்வார்கள்.
    பெண் வீட்டிலிருந்து கொண்டு வந்திருக்கும் 3 செங்களின (புதியது); மேல் சந்தனம், கும்குமம் இட்டு இரு தாய்மான்களும் சேர்ந்து வெற்றிலைல பாக்கு, பூ, பழம் வைத்து (இந்த செங்கலை திருமணம் முடிந்தவுடன் எடுத்து பத்திரப்படுத்தி பின்னர் புதிய வீடு கட்டும்போது அதில் வைத்து கட்டினால் சந்ததி விருத்தியுண்டாகும்). பின் ஆள் உயர ஆலமரக் கம்பில் சந்தனம் குங்குமம் பூசி அதில் வெற்றிலை வைத்து கட்டி இரு வீட்டார் தாய்மாமன்கள் சேர்த்து தூணில் கட்டி வைக்க வேண்டும் இதன் அடியில் மண் நிரப்பிய பையில் ஊன்றி விடவும். தினமும்  தண்ணீர் தெளிக்கவும். காயாமல் பார்த்துக் கொள்வதற்காக. கல்யாணம் முடிந்ததும் நல்ல நாள் பார்த்து ஆற்றங்கரையிலோ, குளக்கரையிலோ நடுவது நல்லது. ஆலமரம் போல் குடும்பமும் நன்றாக வளரும் என்ற ஐதீகம். பின்னர் உறவினர்களுக்கு அறுசுவை விருந்து படைத்து சுமங்கலிகளை குடத்துடன் எதிர்வர இனிதே வழியனுப்பி வைப்பார்கள்.
    மாப்பிள்ளை வீட்டார் சார்தின் நான்கு மூலைகளிலும் மஞ்சள் தடவி அதனை ஒரு பையில் வைத்து பத்திரமாக சாப்பாடு முடிந்து வழியனுப்பும்போது எதிரில் நிறைகுட நீர் சுமந்து சுமங்கலிப் பெண் எதிரில் வர மாப்பிள்ளை வீட்டார் இனிதே வழியனுப்பி வைக்கப்படுவர்.

திருமாங்கல்யத்திற்கு
பொன் உருக்குதல் வைபவம்

    தலைவாசலில் பெரிய கோலமும், திருவிளக்கின் முன் மாக்கோலமும் இட்டு கிழக்கு முகம் பார்த்து விளக்கை வைத்து நிறைநாழி நெல், வெற்றிலைப்பாக்கு, பழம், தேங்காய், சந்தனம், குங்குமம், பன்னீர் செம்பு இவைகளை இலையின் மீது வைக்கவும்.
    ஒரு தட்டில் வெற்றிலைப் பாக்கு தாம்பூலத்துடன் உடைக்காத தேங்காயுடன் திருமாங்கல்யம் உருக்குவதற்கான தங்கத்தையும் வைக்கவேண்டும்.
    ஆச்சாரி தங்கம் உருக்க ஏற்ற பாத்திரம் உமி, போன்ற தேவையான ஏற்பாட்டினை செய்தபிறகு, தங்கம் உருக்கி முடித்தவுடன் தேங்காய் உடைத்து தண்ணீரை ஊற்றி (அபிஷேகம்) எடுத்து பன்னீர் தெளித்து சந்தனம், குங்குமம் பூ வைத்து கற்பூர ஆரத்தி காட்டி, பின் பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்க வேண்டும். பிறகு மாப்பிள்ளையின் உடன்பிறந்த மணமான சகோதரிகள் சுருள் வைக்க வேண்டும் (சுருள் வைத்த சகோதரிகளுக்கு மாப்பிள்ளை வீட்டிலிருந்து பட்டுப்புடவை எடுத்துக்கொடுக்க வேண்டும்). தங்கத்தை பூஜை அறையில் சாமி முன் வெற்றிலை மீது வைக்கவும்.
    பிறகு தங்கத்தை தேங்காய்பழ தாம்பூலத்துடன் தட்டில்வைத்து கொடுத்து ஆச்சாரி சாப்பிட்ட பின் சகுனம் பார்த்து வழி அனுப்பி வைக்க வேண்டும். வந்திருக்கும் அனைத்து உறவினர்களுக்கு சாப்பாடு கொடுத்து பெண் வீட்டாரை வழியனுப்பும் போது பெண்ணிற்கு சாப்பாடு கொடுத்து அனுப்பவேண்டும்;.
    ஆசாரி திருமாங்கல்யம் செய்து திருமணத்திற்கு முன் நாள் (நல்ல நேரம் பார்த்து) எடுத்துவரச் செய்யவேண்டும். (திருமாங்கல்யம் செய்து நெடுநாள் காத்திருத்தல் வைக்கக்கூடாது) பின் திருமாங்கல்யத்தை பூஜை அறையில் வைத்து கும்பிட்டு பத்திரமாக வைக்கவும். தட்சணை தாம்பூலத்துடன் ஆசாரிக்கு கொடுக்கவும்.
    திருமணத்திற்கு இரு வீட்டாரும் தத்தம் உறவினர்களுக்கு புத்தாடைகள் எடுத்துக் கொடுக்க வேண்டும். பெண்ணின் முகூர்த்த பட்டுப்புடவை திருமாங்கல்யம் மற்றும் மாப்பிள்ளையின் பட்டு வேட்டி சட்டை முதலியவற்றையும் தேவையான அனைத்து பொருட்களையும் திருமணத்திற்கு முந்தின நாள் பத்திரமாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
திருமணம்
பெண் வீட்டில் செய்யும் விபரங்கள்
    மணமேடைக்குரிய விளக்கு, நிறை நாழி நெல், மஞ்சள் பிள்ளையார் வெற்றிலைப் பாக்கு, பூ, பழம், தேங்காய் எண்ணெய், திரி, தேங்காய் ஊதுவத்தி, கற்பூரம், மஞ்சள், குங்குமம், 3 சிறிய கலசம் (கும்பம்), பச்சரிசி, நூல், தேங்காய், மாவிலை, நவதானியம், முளைப்பாரி போன்ற மணவடைக்கு தேவையான அனைத்தையும் (நவதானியம் முந்தின நாள் இரவு தண்ணீரில் ஊறவைக்கவும்) காப்பு கட்டுவதற்கு மஞ்சள் விரளியும் எடுத்துக் கொள்ளவும்.
    திருமணத்தன்று காலை வீட்டின் பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கி விபூதி பூசி பின்னர் மண்டபத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும். போகும் போது வழிப் பிள்ளையார்க்கு விடலைத் தேங்காய் போட்டுக் கிளம்பவும்.
மாப்பிள்ளை வீட்டில் செய்ய வேண்டிய சடங்குகள் :
    பெண் வீட்டிலிருந்து குறித்த  நேரத்தில் மாப்பிள்ளை அழைக்க பெண்ணின் அக்கா தம்பி மற்றும் உறவினர்கள் புடைசூழ தட்டில் பூமாலை, பன்னீர் சொம்பு, குங்குமம், சந்தனம், எலுமிச்சம் பழம் பூங்கொத்துடன் வருவார்கள். அவர்களுக்கு குடிப்பதற்கு ஏதேனும் கொடுக்க வேண்டும். பின் உறவினர்கள் முன்னிலையில் பெண்ணின் சகோதரன் (தம்பி) மாப்பிள்ளைக்கு மாலையிட வேண்டும் பின் பன்னீர்; தெளித்து, சந்தனம், குங்குமம் வைத்து கையில் பூங்கொத்தும், எலுமிச்சம்பழமும் கொடுக்க வேண்டும்.
    அதன்பின் பெரியவர்கள் அனைவரும் மாப்பிள்ளையை விபூதி பூசி ஆசீர்வதித்து மேளதாளத்துடன் பெண்ணின் சகோதரனின் கைபிடித்து கூட்டிக்கொண்டு மண்டபம் முன்செல்ல வேண்டும்.
    மண்டபத்திற்கு தலைவாசலில் கிழக்கு முகமாக மணையின் மீது மாப்பிள்ளை நிற்க வேண்டும். அப்போது அங்கு கெண்டி அல்லது சொம்பில் நீர் வைத்திருப்பார்கள். அந்த நீரை பெண்ணின் சகோதரர் மாப்பிள்ளையின் காலில் ஊற்றி புறங்கால் முன்கால் நன்றாக கழுவியவுடன் பதிலுக்கு மாப்பிள்ளை தனக்கு மைத்துனனாக வரப்போகும் பெண்ணின் சகோதரனுக்கு மோதிரம் போட்டு விடுவார் (கைப்பிடி மோதிரம்) அதன்பின் சுமங்கலிப் பெண் ஆரத்தி எடுத்து மைத்துனர்; மாப்பிள்ளையின் கைபிடித்து மண்டபத்திற்குள் அமைத்திருக்கும் மணமகன் அறையில் உட்கார வைக்க வேண்டும் பிறகு அலங்கரிக்கப்பட்ட மணமேடையைச் சுற்றி வந்து உட்கார வேண்டும்.
(சடங்குகள்) மாப்பிள்ளை சடங்கு :
    மாப்பிள்ளை, மணமேடையில் அமர்ந்தவுடன் மாப்பிள்ளையின் தகப்பனாருடன் கூடப்பிறந்த மூத்த தகப்பனார் (பெரியப்பா) பையன் அருகில் உட்கார்ந்து பையனுக்கு விபூதி பூசி அதற்குண்டான சடங்கினை செய்ய வேண்டும். அதன்பின் மாப்பிள்ளையின் தாய்மாமன் மணையில் மாப்பிள்ளையருகில் உட்கார்ந்து மாப்பிள்ளையின் வலது கரத்தில் காப்பு கட்ட வேண்டும். (காப்பு என்பது மஞ்சள் தடவிய நூலில் கட்டியிருக்கும் (விரளி மஞ்சள்) ஐயர் தயார் செய்து வைத்திருந்த பச்சரிசி நிரப்பப்பட்ட தட்டில் உள்ள மஞ்சள் பூசிய தேங்காயின் மீது விரளி மஞ்சள் வைக்க வேண்டும்). அதன்பின், நவதானியத்தை தாய் மாமா எடுத்து பையனின் கையில் கொடுத்து முளைப்பாரியில் போடவேண்டும். பின் மாப்பிள்ளை வீட்டார் எடுத்து வந்திருக்கும் முகூர்த்த வேஷ்டி சட்டையினை தட்டில்வைத்து தாய்மாமன் மாப்பிள்ளைக்குத் தருவார். பின் மாப்பிள்ளை வீட்டார் தாய்மாமனுக்கு வேட்டி, சட்டை தட்டில் வைத்து மரியாதை செய்ய வேண்டும். உடன் தாய்மாமன் உறுமா கட்டி விபூதி பூசி மாப்பிள்ளை பையனுக்கு சமூக பெரிய மனுஷன் அந்தஸ்து பெற வைப்பார் (முற்காலங்களில் உறுமாவிற்குப் பதில் தலைப்பாகை அணிவது வழக்கமாக இருந்து இப்போது அது உறுமாவாக உருமாற்றம் பெற்றது என்பதை நினைவில் கொள்ளவும். இந்த வழக்கம் இலங்கைவாழ்; வெள்ளாளர்கள் இப்பொழுதும் கடைப்பிடித்து வருகின்றனர்). மணமகன் ஆடை அணிகலன்கள் மாற்றி வரும் வரை மேடையில் மணமகள் சடங்கு நடைபெறும்.
    மணமகள் சடங்கு :
    மணமகளை மாப்பிள்ளையின் அக்கா, தங்கை கூட்டிக்கொண்டு மணமேடையில் அமர்த்த வேண்டும். பெண்ணின் அப்பா விபூதி பூசி சடங்கு செய்வார். அதன்பின் பெண்ணின் தாய்மாமன் ஏற்கனவே செய்ததுபோல் காப்பு தயாராக இருக்கும். அதனை தாய்மாமன் பெண்ணின் வலது கரதத்தில் கட்டி பின் நவதானியத்தை முளைப்பாரியில் போட்டு விபூதி பூசி விடுவார். தாய்மாமனுக்கு வேஷ்டி, சட்டை, தட்டில் வைத்து மரியாதை செய்ய வேண்டும். அதன்பின் மாப்பிள்ளை மணவறையில் வந்து உட்கார்ந்து மாப்பிள்ளை வீட்டிலிருந்து எடுத்து வரப்பட்ட முகூர்த்தப்பட்டை தட்டில் வைத்து பெண்ணிடம் கொடுக்க, மாப்பிள்ளையின் சகோதரிகள் கூட்டிக்கொண்டுபோய் முகூர்த்தப்பட்டு உடுக்கச் செய்யவேண்டும். பட்டு கட்டும் போது முந்தானை ஓரத்தில் 1 ரூபாய் நாணயம் ஒன்று முடிய வேண்டும்.
    மாப்பிள்ளை புதுப்பட்டு சட்டை பட்டு வேஷ்டி கட்டி தயாராக இருப்பார். அவரை மைத்துனர் கைப்பிடித்து (முற்காலங்களில் இவர் மாப்பிள்ளை
தோழனாய் மாப்பிள்ளைக்கு நிகராக பட்டு வேஷ்டியும், பட்டு சட்டையும் தலையில்
தலைபாகையுடனும்) மேடையில் உட்காரவைப்பார். அதன் பின்னர் சுற்றத்தார்கள் உறுமா கட்ட ஆரம்பிப்பார்கள். உறுமா கட்டி முடிந்ததும், மணப்பெண்ணை உட்காரவைத்து ஐயர் திருமாங்கல்ய பூஜை நடத்துவார். அதன்பின் மணமக்கள் இருவரும் ஆரத்தியை கண்ணில் ஒற்றிக்கொண்ட பிறகு திருமாங்கல்யத்தை (தட்டில் அட்சதை பூவுடன் வெற்றிலை பாக்கின் மேல் மஞ்சள் பூசிய தேங்காயின் மேல் திருமாங்கல்யம் இருக்க வேண்டும்). கல்யாணத்திற்கு வந்திருக்கும் சுற்றத்தார், நண்பர்கள் அனைவரிடமும் ஆசீர்வாதம் பெற்று, ஆசீர்வாதம் பெற்ற திருமாங்கல்யம், மாப்பிள்ளையின் மூத்த சகோதரியிடம் கொடுக்கப்படும். அதன்பின் மூத்த சகோதரி (சகோதரி இல்லாதவர்கள், மாப்பிள்ளையின் தாய் அல்லது மணமான பெரியப்பா மகள் அல்லது சித்தப்பா மகள் யார் உகந்தவர்களோ? அவர்கள்) மணமேடையின்மீது ஏறி தன்னுடைய தாலிக்கு சந்தனம், குங்குமம், பூ வைத்து பின் முதுகு பக்கம் திருப்பி போட்டுக் கொள்ள வேண்டும். நான்கு தூண்களுக்கும் சந்தனம், குங்குமம் இட்டபின் ஐயர் திருமாங்கல்யத்தை அக்னி சாட்சியாக சகல தேவர்கள் சாட்சியாக  மந்திரம், மேளதாளத்துடன் பையனிடம் கொடுப்பார். பையன் முதல் முடிச்சு போட்டவுடன் மேடையில் நிற்கும் சகோதரி இரண்டு முடிச்சுகள் போடுவார். மூன்று முடிச்சுகளும் நன்றாகப் போடப்பட்டுள்ளதா? என்று உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
3 முடிச்சின் தத்துவம்
முடிச்சு 1    பிறந்த வீட்டின் மகத்துவம் காப்பதற்கு
     2    புகுந்த வீட்டின் மகத்துவம் காப்பதற்கு
     3    கொண்ட கணவனை போற்றுவதற்கு
    பின்னர் திருமாங்கல்யத்திற்கு பூ வைத்து சந்தனம் பொட்டு வைக்கவும். மூன்று முடிச்சு போட்ட இடத்திலும் சந்தனம் பொட்டு வைக்கவும். மாப்பிள்ளை மனைவிக்கு திலகமிட வேண்டும். அதேபோல் மூன்று முடிச்சிற்கும் திலகமிட வேண்டும். பின் மாலை மாற்று (3 முறை) செய்ய வேண்டும். அதன்பின் இருவருக்கும் பால்பழம் தரப்படும். ஏற்றி இறக்க வேண்டும். அதன்பின் அடை பொரியால் செய்த திருஷ்டிப் பொருள் முதலாக மேற்காகவும், இரண்டாவது கிழக்காகவும் 3-வது வடக்காகவும் 4-வது தெற்கிலும் திருஷ்டி சுற்றிப் போடப்படும். தாலிகட்டிய மாப்பிள்ளையின் சகோதரிக்கு பெண்ணின் தகப்பனார் தாம்பூலத்துடன் தட்சிணை தரவேண்டும்.
    அதன்பின் பெண்ணின் தகப்பனார் மாப்பிள்ளைக்கு கைப்பிடி மோதிரம் போட்டு மணப்பெண்ணின் கைகளை ஒரு சேர்த்து தாம்பூலத்துடன் ஒரு நாணயமும் வைத்து சிகப்பு துணியால் கட்டி விபூதி பூசி ஆசீர்வாதம் செய்துபின், உறவினர்கள் ஆசீர்வாதம் செய்வார்கள். பின் மேடையை 3 முறை வலம் வர பெண் வீட்டார் மேடையிலுள்ள வரிசைத்தட்டுடன் கூட வலம் வருவர்.
    முகூர்த்தம் முடிந்ததும் சுற்றத்தார் அனைவருக்கும் பந்தி பரிமாறப்படும்.
    திருமணம் முடிந்ததும் பெண் வீட்டார் ரூ.101ஃ- அல்லது தங்கள் தகுதிக்கு ஏற்றவாறு பணம் சுருளாக வைத்து ஒரு குலை வாழைப்பழமும் கொடுத்து உடன் மறுவீடு காண அனுப்பிவைப்பர். மாப்பிள்ளை வீட்டில் செய்யப்பட்ட சர்க்கரைப் பொங்கலுடன் பால், பழம் உண்டு பின் உப்பு, புளி தொட்டு பின் மண்டபம் திரும்ப வேண்டும்.
மண்டபம் வந்தவுடன் சட்டரசம் பரிமாறும் நிகழ்ச்சி
    நிச்சதாம்பூலச் சார்த்தில் குறிப்பிட்டபடி மணமக்களுக்கு அன்னம் பரிமாறப்படும் அப்போது மாப்பிள்ளை பருப்பு, நெய், பப்படம் போட்டு நன்றாக விரவி பின் அதில் ஒரு தங்க மோதிரம் வைத்து மாப்பிள்ளை ஒரு உருண்டை போல் பிடித்து பெண்ணிடம் கொடுக்க வேண்டும். அப்போது பெண்ணானவள் மாப்பிள்ளையின் எதிரில் நின்று அதனை வாங்கி தன் இலையில் வைத்துவிட்டு பின் மாப்பிள்ளை பெண்ணிற்கு இனிப்பு ஊட்டவேண்டும். பின் பெண்ணும் மாப்பிள்ளைக்கு இனிப்பு ஊட்டவேண்டும். அதன்பின் பெண் அந்த சாப்பாட்டு உருண்டையிலுள்ள மோதிரத்தை எடுத்து தன் கையில் போட்டுக்கொண்டு சாதத்தை சாப்பிட வேண்டும்.
    மாலையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும்.
நலுங்கு உருட்டுதல்
    வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் நலுங்கு விளையாட்டு துவங்கும். ஒரு பெரிய சமுக்காளம் விரிப்பு விரிக்கப்பட்டு அதன் இருமருங்கிலும்
எதிரெதிரில் மணப்பெண்ணும் பையனும் அமரவைப்பார்கள் சுற்றத்தார் புடைசூழ நலுங்குப்பாட்டு பாட பையனும் பெண்ணும் நலுங்கு தேங்காய் உருட்டி விளையாடுவார்கள். அதன்பின் பூப்பந்து உருட்டுவார்கள். அரைமணி நேர விளையாட்டிற்கு பின் பெண் மாப்பிள்ளையின் இரு கைகளிலும் சந்தனம் குங்குமம் பூசி தலையில் அப்பளம் நொறுக்க போடவும். அதேபோல் மாப்பிள்ளை பையனும், பெண்ணுக்கு சந்தனம் குங்குமம் இட்டு தலையில் அப்பளம் நொறுக்க வேண்டும்.  நலுங்கு விளையாட்டு முற்றுபெறும்.
நாலாம் நீர் சடங்கு
    மணமேடையில் பெண் வீட்டார் கொடுக்கும் சீர் வரிசைகளை வைத்து (வெள்ளிப் பாத்திரங்கள்) இரண்டு தட்டுகளில் தலா 51 முறுக்குகள் வைக்கவும். ஒரு குலை வாழைப்பழம் வைக்கவும். பெண்ணும், பையனும் மணமேடையில் அமரவைத்து பக்கத்தில் இரு கிண்ணத்தில் நல்லெண்ணை வைத்திருக்கும் அதை, மூன்று முறை மாறி மாறி வைக்கவேண்டும். இருவரும் குளித்து வந்ததும், ஒரு நீண்ட பனை ஓலையின் நுனிப் புறத்தை ஒரு தாம்பாள தட்டில் வைத்து மாப்பிள்ளையும் பெண்ணும் பிடித்துக்கொண்டு தாய்மாமன் ஒரு கெண்டியில் தண்ணீர் நிரப்பி ஒரு ரூபாய் நாணயம் வைத்து அந்த கெண்டி தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்ற தாய்மாமாவானவர் தாரைவார்த்துக் கொடுப்பார். தாரை வார்க்கும் பொழுது பெண்ணின் குலப்பெருமையும், பையனின் குலப்பெருமையையும், பையனுக்கு கொடுக்கப்பட்ட சீர்வரிசைகளைக் கூறி தாரைவார்த்துக் கொடுப்பார். பின் பெண் எழுந்து மாப்பிள்ளையின் பின்னால் நின்று கொள்ளவேண்டும்.
    அதன்பின் முதலில் பிள்ளையார் சுருள் என்று சுருள் ஆரம்பமாகி அடுத்தது வீட்டின் மூத்த மாப்பிள்ளைகளுக்கு சுருள் வைக்கவேண்டும். அதுபோல் பெண்ணுடன் கூட எத்தனை மூத்த சகோதரிகளே அவர்களின் கணவன்மார்களுக்கு மாமியார் சுருள் எனப்படும் சுருள் வைக்கப்படும். பின் பையனின் புது உறவாக கருதப்படும், மாமியார்கள் முறை வருகின்ற அத்தனைபேரும், அண்ணியார் முறை வருகின்ற அத்தனைபேரும் மாப்பிள்ளை வழி பெண் வழி அத்தான்மார்கள் அத்தனை பேரும் தத்தம் வசதிக்கேற்றவாறு சுருள் வைப்பு நிகழ்ச்சி நடைபெறும். கடைசியாக மைத்துனர் சுருள் (எதிர்; சுருள்) வைக்கப்படும்.
    சுருள் வைப்பு நிகழ்ச்சி முடிந்தவுடன் மணமேடையில் வைக்கப்பட்ட முறுக்கு பழம் எல்லோருக்கும் விநியோகிக்கப்படும்.அதன்பின் தீயல் சாதம் பரிமாறப்பட்டு பின் மாப்பிள்ளையை இரவுத்தங்தலுக்காக பெண்ணின் வீட்டிற்கு அழைத்துச் செல்லவேண்டும்.
    ஏழாம் நீர்ச்சடங்கு
    திருமணம் முடிந்த மறுநாள் காலையில் பெண் எழுந்து குளித்துவிட்டு தயார் நிலையில்  வைக்கப்பட்ட அடுப்பில் பொங்கல் வைத்து அதனை விளக்குமுன் இரண்டு தட்டில் வைக்கவும். பின் தயார் நிலையில் உள்ள பெரிய பாத்திரத்தில் மஞ்சள் நீரால் நிரப்பி அதில் மோதிரமும் எழுத்தாணியும் போட்டு விடவும். மாப்பிள்ளை பெண்ணை எடுக்க வைப்பார்கள். யார் எதை எடுக்கிறார்களோ அதை வைத்து அவர்களின் சாதுர்யம் தெரியவரும் என்பது ஐதீகம்.
    பின்னர் வீட்டிள்ள தாத்தா அல்லது வயதில் முதிர்ந்தவர் மாப்பிள்ளை, பெண்ணிற்கு காப்பு அறுத்து இரண்டு தட்டிலுள்ள தாம்பூலத் தேங்காயின் மீது வைத்துவிடவேண்டும். பின் பிள்ளை மாற்று சடங்கு நடைபெறும். அதில் ஒரு பொம்மையை பிள்ளையாக பாவித்து அப்பிள்ளையை ஒரு தட்டில் சிவப்பு துணி விரித்து அதில் பொம்மையை வைத்து அதற்கு செயின் போட்டு வைத்துவிட வேண்டும். பின் எல்லோரும் குழந்தைக்கு இயன்ற அளவு ரூபாயினை போடுவார்கள். பெண்ணிற்கும் பையனுக்கும் விபூதி பூசி ஆசீர்வாதம் செய்வார்கள்.
    கடைசியில் தட்டினை எடுத்து தட்டிலுள்ள பணம் எல்லாம் பையனின் சகோதரியிடம் எடுத்துக் கொண்டு ஒப்படைத்துவிட்டு ரூ.101ஃ- தட்டில் போட்டு பிள்ளையை பெண்ணிடம் ஒப்படைக்கப்படும்.
    அதன்பிறகு மாப்பிள்ளைக்கும் பெண்ணிற்கும் முட்டை அவியல் வைத்து பாயசத்துடன் எல்லா கறிவகையும் செய்து சாப்பாடு போட்டு மறுவீடு அனுப்பி வைக்கப்படுவர். மறுவீடு அனுப்பும்பொழுது பூந்தி, பழம், முறுக்கு கொடுத்து அனுப்புவார்கள். பெண்ணின் தாய், கூஜாவில் பால் கொண்டு செல்லவேண்டும். கொண்டுவந்த பாலை மாப்பிள்ளையின் அம்மா காய்ச்சி வருகின்ற எல்லோருக்கும் மாமியார் முறை உள்ளவர்களுக்கு பாலும் பழமும் கொடுத்து மிச்சமிருக்கும் பாலை உறைவிட்டு வைக்க வேண்டும்.
    மணமகளான திருமகள் வீட்டில் வலதுகாலால் அடியெடுத்து வைத்தவுடன் விளக்கினை ஏற்றி சாமி கும்பிட்டு பின்னர் அடுக்களையில் சென்று உப்பும், புளியும் தொட்டு தன்னுடைய மாப்பிள்ளை வீட்டுடனான பந்தத்தினை உறுதி செய்து கொள்ள வேண்டும். பின்னர் பால் பழம் சாப்பிட வேண்டும். இரண்டாவது மறுவீட்டிற்கு மாவும், பழமும் கொடுத்து அனுப்ப வேண்டும்.
    திருமணம் முடிந்த ஏழாவது நாளில் பெண் வீட்டில் பொங்கல் வைத்த புளித்த பச்சரிசி சாதத்தில் பச்சரிசி மாவு கலந்து திருமங்கல காடி காய்ச்சி குடிபார்கள். ஏற்கனவே ஏழு நாளும் தண்ணீர் ஊற்றி வளர்ந்திருக்கும் நவதானியத்ததினை ஆற்றில் கொண்டு கரைக்க வேண்டும். ஏழாம் நாள் அஷ்டமி, நவமி இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
    தாலி பிரித்து கோர்க்கும் நாளன்று விளக்கு ஏற்றி விளக்கின் முன் கிழக்கு மேற்காக உட்காரவைத்து மாப்பிள்ளையின் தாயாரோ அல்லது சகோதரிகளில் யாராவது ஒரு சுமங்கலி தாலியினை பிரித்து கழுத்திலிருந்து எடுக்காமல் அப்படியே புதிய செயினில் கோர்க்க வேண்டும். பிரித்து எடுத்த மஞ்சள் கயிறினை கண்ணில் ஒற்றி, பத்திரமாக வைத்துக் கொள்ளவேண்டும். பின்னர் குழந்தை பிறந்ததும் குழந்தைக்கு கட்டிவிடலாம். சிலர் பத்திரமாக பூட்டி பாதுகாப்பாக வைத்திருப்பார்கள்.
சீமந்தம் (வளைகாப்பு)
    பெண்ணானவள் காப்;பம் தரித்தது மருத்துவர்மூலம் உறுதி செய்யப்பட்டு பின் காப்;பமுற்ற பெண் மருத்துவ ஆலோசனைப்படி உரிய பாதுகாப்புடனும், நல்ல புஷ்டியான ஆகாரம் உட்கொண்டு வரவும் 5-ம் மாதம் 5-வகை பலகாரங்கள் பெண் வீட்டார் கொண்டுவந்து பார்ப்பார்கள். 7-அல்லது 8-ஆம் மாதம் சீமந்தம் நடத்த வேண்டும். 9 வகை பலகாரங்கள் கொண்டு செல்லவேண்டும்.முக்கியமாக 1001 முறுக்கு 750 முந்திரிக்கொத்து, 500 தேன்குழல், 3 குலை வாழைப்பழம், கட்டியரிசி 9 இருக்க வேண்டும். 3 கிலோ வீதம் மற்ற இனிப்பு பலகாரங்கள் இருக்கலாம்.
    பெண்ணிற்கும், மாப்பிள்ளைக்கும் துணிமணிகள் மற்றும் புடவைகள், பட்டுச் சட்டை, மாப்பிள்ளை கழுத்திற்கு செயின், பெண்ணிற்கு தங்கம், வெள்ளி காப்புகள் இரண்டு கைகளுக்குமாக 4 (இரண்டு ஜோடிகள்) 11 10 11 இரண்டு கைகளுக்கும் கண்ணாடி வளையல்கள் இருக்க வேண்டும். பையனுடைய வீட்டில் சீமந்தத்தன்று (நல்ல நாள் பார்த்து) விளக்கு ஏற்றி வைத்து வெற்றிலை பாக்கு தேங்காய், பூ, பழம் எல்லாம் வைத்து பெண் வீட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட வளையல்கள், பலகாரங்கள் எல்லாம் படைத்தவுடன் மாப்பிள்ளை பெண் புதுத்துணி அணிந்து வந்து திருவிளக்கின் முன் நின்றவுடன் மாப்பிள்ளையின் அம்மா குலதெய்வத்திற்கு கற்பூரம் காண்பித்து அனைவரும் சாமி கும்பிட்டுவிட்டு, மைத்துனன் மாப்பிள்ளையை மணையில் உட்கார வைத்து பன்னீர் தெளித்து சந்தனம் குங்குமமிட்டு பெண்வீட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட செயின் போட வேண்டும். அதன்பின் பெண்ணை மணையில் வைத்து பெண்ணின் மடியில் மாப்பிள்ளை விட்டு சின்ன குழந்தையை மடியில் வைத்து வளையல் போடவேண்டும். அதன்பின் பையன், பெண் இவர்களின் தகப்பனார்களில் யார் பெரியவரோ அவரைக் கொண்டு பெண்ணிற்கு பன்னீர் தெளித்து சந்தனம், குங்குமம் வைத்து வளைகாப்பு அணியவேண்டும். மற்றும் உறவினர்கள் எல்லோரும் வளையல் அணிவித்து, பின் உறவினர்களுக்கு விருந்து பரிமாறப்படும். வந்திருக்கும், பெண்கள், குழந்தைகள் எல்லோருக்கும் வளையல் கொடுக்க வேண்டும்.
மடி நிறைப்பு
    மாப்பிள்ளைக்கு மாமியார் சுருள் வைக்க வேண்டும். மாமியாருக்கு மாப்பிள்ளை விட்டிலிருந்து குழந்தை பிறந்த பிறகு புடவை எடுத்துத் தரவேண்டும்.
    பெண்ணின் முந்தானையை பரப்பி பிடிக்க வேண்டும். அதில் ஒரு
காகிதம் ஒன்று போட்டு பின் அதன் மேல் வாழையிலை வைத்து கரித்துண்டு, இரும்புத்துண்டு மற்றும் எல்லாப் பலகாரங்களும் போட்டு மடி நிறைத்து முந்தானையை இடுப்பில் சொருகி மடியை மாமியார் கட்டி விடுவார்கள். மடிநிறைத்து பெண் போகும்போது சகுனம் பார்த்து அனுப்ப வேண்டும். அப்போது மாப்பிள்ளை திரும்பி பார்க்கக்கூடாது.
    அதன்பின் 5 நாட்கள் கழித்து மாப்பிள்ளை வீட்டார் எதிர் பலகாரம் கொண்டு செல்லவேண்டும். அப்போது விருந்து சாப்பாடு போடவேண்டும்.
புத்திரன் காணுதல்
    குழந்தை பிறந்தவுடன் நாள், நட்சத்திரம்,நேரம், நிமிடம் முதலியன துல்லியமாக குறித்துக் கொள்ளவும். சுகப்பிரசவம் என்றால் தாய்க்கு குழந்தை பிறந்தவுடன் 1ஃ2 டம்ளர் இஞ்சி பூண்டு சேர்த்து அரைத்து தண்ணீர் கலந்து கொடுக்கவும். எதற்கு என்றால் வாயுத் தொல்லை, கசடுகள் ஒதுங்காமல்; தீட்டோடு சீக்கிரமாக வரும் என்பது ஐதீகம்.
    அதன்பின் குழந்தைக்கு சேனைப்பால் கொடுக்க வேண்டும். (சீனியும் இளம் சுடு நீர் கலந்த திரவம்) குழந்தையானது எல்லோரிடமும் இனிப்பாக பழகவும். நாக்கில் இனிப்பு படும் போது குழந்தை மகிழ்ந்து சிரிக்கும். குழந்தையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்.
    குழந்தை பிறந்தவுடன் நன்றாக அழுதால் குழந்தையின் உடல் நல்ல ஆரோக்கியம் கிடைக்க ஏதுவாகும்.
    குழந்தைப்பேறு ஆஸ்பத்திரியில் நடைபெற்றால் குழந்தையையும்,
தாயையும் கூட்டிக்கொண்டு வீட்டிற்கு வரும்போது, மஞ்சள் சுண்ணாம்பு, வெற்றிலை மூன்றையும் கலந்து அதை தலையை சுற்றி குழந்தையின் காலில் பொட்டு வைக்கவும். திருஷ்டி களித்தவுடன் வீட்டிற்குள் செல்லவும். தீட்டு முடிந்தபின்தான் பொட்டு நெற்றியில் வைக்க வேண்டும்.
    குழந்தை பிறந்தவுடன் நல்ல நேரம் பார்த்து மாப்பிள்ளை வீட்டார் வெற்றிலை பாக்கு, சீனி, வாழைப்பழம் அவரவர் தகுதிக்கேற்ப வாங்கிக்கொண்டு சொந்தங்களுடன் போய் குழந்தையை பார்க்கும் நிகழ்ச்சிக்கு புத்திரன் காணுதல் நிகழ்ச்சியாகும். அதற்கு விருந்து சாப்பாடு கொடுப்பார்கள் பெண் வீட்டார். இப்போது பழக்க வழக்கங்கள் மாறி சாயங்காலம் பலகாரம் காப்பி என்றாகிவிட்டது.
பாண்டசுத்தி
பதினாறாம் நாள் நல்ல நேரம் பார்த்து பாண்ட சுத்தி (சட்டிபானை தொடுதல்)  பெயர் வைப்பார்கள். காலையில் ஐயர் புண்ணியாஜனம் பண்ணி பின் குழந்தையின் அப்பாவின் தகப்பனார் பெயரையோ, பெண் குழந்தையாயின் குழந்தையின் அப்பாவின் அம்மா பெயரையோ வைக்கவேண்டும். ஒரு மனிதன் குழந்தை, வாலிபன், குடும்பஸ்தன் தாத்தா என்ற நிலைக்கு உயர்ந்து தன்னுடைய பெயரைத் தாங்கிஅடுத்த வாரிசைப் பெறும்போது தன்னுடைய பெயர் தாங்;கி வரும் குழந்தையை பெயரனாக, பெயர்த்தியாகப் பெறுகிறான். இதுவே பின் நாட்களில் பேரன், பேத்தி எனப்பட்டது. நினைவில் கொள்க.
மருத்துவம் (சுகப்பிரசவம்)
    பதினாறு நாட்களிலும் குழந்தையைப் பெற்ற தாய்க்கு ஊட்டச் சத்துக்கள் கை மருந்துகள் செய்து கொடுக்க வேண்டும். சுகப்பிரசவத்திற்கு மேற்சொன்னவை. ஆப்ரேசன் என்றால் சூப் வகைகள் கொடுக்க வேண்டும். குழந்தை பிறந்தவுடன் தாய்க்கு வயிறு இறுக  கட்டிவிட வேண்டும். (அப்போது தான் வயிறு இறுகும் உடலின் வயிற்றுப் பகுதி சுருங்கி பழைய தோற்றம் பெறும்) வயிற்றுப் பகுதியிலும் வயிற்றுக்கு அடிப்பகுதி புட்டம் தொடைகளில் மஞ்சள் தேய்த்து மஞ்சள் கலந்து வென்நீரால் தினமும் குளிக்க வைக்க வேண்டும். புதன், சனி, இரு நாட்களிலும் உடல் முழுதும் எண்ணெய் தேய்த்து 1ஃ2 மணி நேரம் ஊறவைத்து சீகக்காய் தேய்த்து வென்நீரில்; குளிக்க வேண்டும்.
    சத்துள்ள ஆகாரங்கள் மீன் கறுத்தகறி புரத சத்து அதிகம் உள்ள உணவு வகைகளை சாப்பிட வைக்க வேண்டும். குளித்து முடித்தவுடன் தாய்க்கும் சேய்க்கும் சாம்பிராணி புகை கண்டிப்பாக காண்பிக்க வேண்டும்.
    குழந்தை பிறந்து 16 நாட்களில் இரண்டு நாட்கள் மஞ்சள் அரைத்து வெறும் வயிற்றில் (காலி வயிற்றில்) காலையில் சிறு உருண்டைகளாக 5 உருண்டைகள் கொடுக்கவும். இரண்டு நாட்கள் ஓமம், சுக்கு, கருப்பு கட்டி கலந்து லேகியம் போல் பண்ணி 10 ஸ்பூன் கொடுக்கவும். லேகியம் சாப்பிடும்போது சிறிதளவு தண்ணீர் குடிக்கவும். அதுவும் உடனே குடிக்காமல் 1ஃ2 மணி நேரம் கழித்து குடித்தால் உடலுக்கு நல்லது 3 நாட்கள், பூண்டு, பால், நெய், கருப்பட்டி கலந்து கொதிக்க வைத்து அது கட்டியாக வந்தவுடன் 1ஃ2 டம்ளர் எடுத்து ஸ்பூனில் சாப்பிட்டு வரவேண்டும். உடனே தண்ணீர் குடிக்கக்கூடாது. ஒருநாள் விட்டு ஒரு நாள் வெந்தயத்தை இரவில் தண்ணீரில் ஊறவைத்து விட்டு காலையில் அதை எடுத்து அரைத்து கருப்பட்டி கலந்து சூடாக்கி களி மாதிரி ஆனவுடன் கிளறிக்கொடுத்து காலை மாலை கொடுத்து வரவேண்டும். இடைப்பட்ட வேளையில் பசும்பால் குடித்து வரவேண்டும். உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
    குறைந்தது 10 நாட்களாவது தாய் கண்ணிற்கு மை தீட்டிக் கொள்ள வேண்டும். குறைந்தது 41 நாட்கள் வரை தலைப்பிள்ளைக்கு (தலைப் பிரசவத்திற்கு) எழுந்து உட்காராமல் படுத்தே இருந்தால் இடுப்பும், புற முதுகும் நன்கு பலம் பெறும்.
    குழந்தை பிறந்து 30 நாட்களில் முதல் தீட்டு வருவது சகஜம். அதற்குள் பாண்ட் சுத்தி எனும் சட்டிப்பானை தொட்டு பெயர் வைப்பது நலம்.
மருத்துவம் (ஆப்ரேசன்)
    வேகவைத்த காய்கறி சூப்புகள், ஆட்டின் நெஞ்செலும்பு, மண்ணீரல்
இவைகளை சூப்பாக வைத்து கொடுப்பது நல்லது. பூண்டு குளம்பு கொடுப்பது நல்லது.
    சூப்பிற்கு தேவையான பொருட்கள் : வெங்காயம், சீரகம், கொத்தமல்லி தளை, கரிவேப்பிலை, விதையுள்ள மல்லி, இஞ்சி, பூண்டு மஞ்சள் எல்லாம்
தேவையான அளவு அரைத்து தயார் செய்து மறுநாள் காலையில் குடித்து வரவேண்டும்.
    குழந்தை பிறந்த 15 நாட்களுக்கு தாய் தண்ணீரோ வெந்நீரோ
தனியாக குடிக்கக்கூடாது. கஞ்சி, பால் போன்றவற்றை கலந்து வெதுவெதுப்பாக குடித்து வரவும். ஊட்டச்சத்து உள்ள ஆகாரங்கள் சாப்பிடவும்.
கவனம் : ஆப்ரேசன் செய்யப்பட்ட தாய்மார்கள் மீன், மற்றும் அரிப்பு உண்டாக்கும், கத்தரிக்காய், வாழைக்காய், முருங்கைக் கீரை சாப்பிடாமல் தவிர்ப்பது நலம்.
    ஆப்ரேசன் செய்யப்பட்ட தாய்மார்கள், குறைந்தது 6 மாத காலம் வரை கனமான வேலைகளையோ, பழு தூக்குவதையோ, செய்யக்கூடாது. உடலுறவும் கூடாது.
    சுகப் பிரசவத்திற்கு 3 மாதம் வரை மேற்குறிப்பிட்டவை செய்தல் கூடாது. அப்போதுதான் கர்பப்பை கீழே இறங்காது. பலப்படும். ஒரு பெண்ணாய் பிறந்தவளுக்கு அதுதான் பலம்,ஆதாரம், சந்தோஷம்.
புண்ணியாஜனம்
(பாண்ட சுத்தி எனும் சட்டிபானை தொடுதல்)

    திருவிளக்கேற்றி பூமாலையிட்டு, தாம்பூலம் எல்லாம் வைத்து விளக்கின் முன் மூன்று இலைகள் (மூன்று திசைகளில்) அதில் கறிவகைகள் மீன் அவியல், முட்டை  அவியல், முருங்கை கீரை துவரன் எல்லாம் பரிமாறி இலைக்கு மூன்று தீபந்தங்கள்; வீதம் 9 தீப்பந்தங்கள் ஏற்ற விளக்கின் முன் உள்ள இலையில் சைவமாகவும் மற்ற இரண்டு இலைகளில் அசைவமாகவும் வைக்கவும். ஒரு சொம்பில் தண்ணீரில் பூப்போட்டு வைக்கவும். பின் சாம்பிராணி, கற்பூரம் காண்பிக்கவும். குழந்தையை முறத்தை கவிழ்த்துப் போட்டு அதில் கிடத்தவும் பின் குழந்தையின் பாட்டி அல்லது வயதான சுமங்கலிப் பெண் சொம்பில் உள்ள தண்ணீரை மூன்று முறை குழந்தையின் வயிற்றின்மேல் தெளித்து குழந்தைக்கு பெயர் சூட்டுவார்கள். பெயர் சூட்டும் போது குழந்தையின் காதில் மூன்றுமுறை அதன் பெயரை மந்திரம் போல் ஓதுவார்கள்.
    அதன்பின் தாயனவள் குழந்தையின் காலடியில் விழுந்து வணங்கி, குழந்தை எனக்கு சாப்பாடு உனக்கு என்று குழந்தை எடுத்துக்கொண்டு திரும்பிப் பார்க்காமல் தாயின் அறைக்கு எடுத்துச் செல்லவேண்டும்.
    இதன் ஐதீகம் என்னவென்றால் குழந்தை பிறந்தது முதல் பெயர் சூட்டும் நாள் வரை துடுப்பகுழி நாச்சியார் என்ற தெய்வம் குழந்தையின் தொட்டில் அருகே பாதுகாப்பிற்காக நிற்குமாம். அந்த தெய்வத்திற்குத் தான் சாப்பாடு படையல் போட்டு பின் குழந்தையை முறத்திலிருந்து வணங்கி எடுக்கும்போது சாப்பாடு உனக்கு குழந்தை எனக்கு என்று தாயானவள் சொல்லி குழந்தையை எடுக்கவேண்டும். ஈரத்துணியால் குழந்தையை துடைத்து அதன்பின் தாத்தா ஆச்சி முன்னிலையில் வைத்து புத்தாடை உடுத்தி தங்க நகை போடுவார்கள்.
    சாப்பாடு எல்லோருக்கும் பரிமாறி அதன் பிறகு தாய்க்கும் சேய்க்கும் ஆரத்தி எடுத்து திருஷ்டி சுற்றிப் போட வேண்டும்.
    குழந்தை பிறந்து சட்டிபானை தொடும் நாள்வரை விளக்கின் எச்சமான கரியை எடுத்து பொட்டு வைத்து வரவேண்டும். குழந்தையின் கண்ணுக்கு தினமும் மைதீட்டி வரவும்.
    இருபத்தி இரண்டாம் நாள் குழந்தையின் இடுப்பில் கறுப்பு கயிறு கட்டவும் 41-நாள் கழித்து தான் கற்பூரம் தடவி இரவின் வீட்டின் முன் திருஷ்டி செய்யவேண்டும். 41-ம் நாள் குழந்தையும் தாயும் குளித்து தாய் ஈரத்துணியுடனும் குழந்தை துணியில்லாமலும் வீட்டின் வாசலில் கிழக்கு முகமாக நிற்கவும். பின் வீட்டில் உள்ள பெரியவர்கள், சுமங்கலிப் பெண்கள் இவர்களில் யாரேனும் ஒருவர் சிறிய கொள்ளிக்கம்பு சுற்றி போட்டுவிட்டு காலில் தண்ணீர் ஊற்றி கழுவியபின் சிறிது தலையில் தெளித்து விட்டு பின் வீட்டிற்குள் செல்லவும். அன்று மாலை மாப்பிள்ளை வீட்டார் வந்து தாயையும் சேயையும் வீட்டிற்கு கூட்டிச் செல்வார்கள் (பிறந்த வீட்டில் அன்று தங்கக்கூடாது).
    குழந்தைக்கு தொட்டில் கம்பு தாயின் தாய் வீட்டிலிருந்து கொண்டு செல்ல வேண்டும். அதனுடன் குழந்தைக்கு பொட்டுவைப்பதற்கு பொட்டு கூட்டி செல்வார்கள். (அரிசியை வறுத்து கருகிய அரிசியுடன் வாசனைத்திரவம் சேர்த்து அரைத்தால் குழந்தைகளுக்கு இடும் பொட்டு ரெடியாகிவிடும்). கூடவே சோப்பு, சீப்பு, பவுடர் வெள்ளிச் சங்கு (பாலாடை) கரண்டி கிண்ணம் போன்றவை தாய்வீட்டு சீதனமாக கொடுக்கப்படும்.

    குழந்தைக்கு அமுதூட்டல்
    குழந்தை பிறந்து 7வது மாதத்தில் (அன்னம்) அமுதூட்ட செய்வது சாலச் சிறந்தது. தாய் வீட்டிலிருந்து குழந்தைக்கு துணியும் சாப்பாடும் ஊட்ட வெள்ளியாலான தட்டு, வெள்ளிக் கரண்டியும், வெள்ளி டம்ளரும் அவரவர் வசதிக்கேற்ப கொடுக்க வேண்டும்.
    வீட்டில் அரவணை செய்து சாமி முன் வைக்கவும். அன்று கோவிலுக்கு அபிஷேகம் கொடுத்து அதிலிருந்து தரப்படும் பிரசாதமும் கலந்து குழந்தைக்கு சோறூட்டல் நடைபெறும்.
    குழந்தை ஆணாக இருந்தால் பட்டு வஸ்திரமும், பெண்ணாக இருந்தால் பட்டுப் பாவாடை பட்டு சட்டையும் போட்டு அலங்கரித்துக் கொள்ள வேண்டும்.
பிறந்த நாள் விழா
    குழந்தை பிறந்து ஒரு வருடம் முடியும்போது நாள் நட்சத்திரம் மாதாமும் சேர்ந்து வரும் நாள் பிறந்த நாள் அன்று காலையில் கோவிலுக்கு அபிஷேகம் அர்ச்சனை செய்து சர்க்கரைப் பொங்கல் வைத்து சாமிக்கு படைக்க வேண்டும். பின் குழந்தைக்கு பட்டு அங்கவஸ்திரம் உடுத்தி (பெண் குழந்தையென்றால் பட்டுப் பாவாடை ஜாக்கெட் அணிவிக்கவும்) இதெல்லாம் தாய்வீட்டு சீதனமாகும். குழந்தைக்கு செயின் போட வேண்டும்.
    பிறந்த நாள் கழித்து அடுத்த நாள் குழந்தையை குலதெய்வம்
கோவிலில் வைத்து மொட்டை போட்டு, காது குத்தவேண்டும். காது குத்தும்போது காதணி, காது குத்தல் அரிசி செய்து, ஆசாரியைக் கூப்பிட்டு தாய்மாமன் மடியில் வைத்து மொட்டையடித்து பின் தாய்மாமன் மடியில் வைத்து காதுகுத்தவேண்டும்;. இதெல்லாம் தாய்மாமன் செலவு செய்ய வேண்டும். காது குத்தல் முடிந்ததும் எல்லோருக்கும் (காதரிசி) அரிசியும், இனிப்பு வகைகள் பரிமாறவும் பின் ஆசாரிக்கு மாமன் தாம்பூலத்துடன் தட்டில் வைத்து தட்சிணை கொடுக்கவும். இது தாய்மாமன் கடமை.
60 வயது பிறந்த நாள்
வருங்கால சந்ததியினருக்கு ஒரு விண்ணப்பம்
    ஒரு ஆண் மகனுக்கு திருமணமாகி அவரது 60வது பிறந்த நாள் அன்று அதை அவருக்குப் பிறந்த குழந்தைகள் அனைவரும் சகலவிதமான மரியாதையுடன் செய்து மகிழ்விப்பது 60-ம் கல்யாணம் ஆகும்.
    ஒரு மனிதனுக்குப் பிறக்கும் பிள்ளைகள் தங்களுடைய தாய், தகப்பனின் கல்யாணக் கோலத்தில் பார்க்கும் பொருட்டும், தகப்பனாரின் 60-ம் பிறந்த நாளில் அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம், மகிழ்ச்சி ஏற்படும்.
    மேலும் 60 வயது வரை நமக்காக உழைத்து, இரவு பகல் பாராமல் பாதுகாத்து படிக்க வைத்து குழந்தைகள் நலனில் அக்கரைக் கொண்டு முன்னேற்றப்
படிகளில் ஏற்றிவிட்ட மனித தெய்வமாகிய தாய், தகப்பனுக்கு செய்வது ஒவ்வொரு பிள்ளைகளின் கடமையாகும். அதுவும் இது முதல் கடமையாகும். அதிலும் குடும்பத்திலுள்ள ஆண் பிள்ளைகளுக்குத்தான் பொறுப்பு. அவரவர் வசதிக்கேற்ப இந்த 60-ம் கல்யாணம் செய்ய வேண்டும். குறைகள் சொல்வதாக யாரும் நினைக்க வேண்டாம் நாட்டின் நடப்பை மட்டுமே எழுதுகிறேன்.
    ஒவ்வொரு ஆண் மகனும் தன் தாய் தகப்பனுக்கு இந்த கடமையை ஆற்றியே ஆக வேண்டும். அப்படி செய்யும் பிள்ளைதான் உத்தமன் என்று பெயர் வாங்குவான். செலவு கணக்கு என்று ஒருவன் நினைப்பானாகில் இவனை ஆளாக்கிய செலவு கணக்கு எந்த கணக்கில் சேர்ப்பது? பெற்ற கடனை அடைக்க எத்தனை பிறவிகளோ தெரியாது. எந்த கோட்டையில் இருந்தாலும் அவர்களின் மனப்பூர்வமான ஆசிர்வாதம் இல்லாமல் உங்களால் ஒரு இம்மியளவு கூட முன்னேற முடியாது என்பதை ஆணித்தரமான கூறமுடியும்.
    ஆலமரத்தை அதன் விழுதுகள் தாங்குவது போல் தன் தாய், தந்தையரை ஒவ்வொரு ஆண் பிள்ளைகளும் தாங்கிப் பிடிக்க வேண்டும். அது அவர்களின் முக்கிய கடமைகளுள் ஒன்று என்று உணர்ந்து இருந்தால் பல கோடி புண்ணியம் நம்மை வந்தடையும் என்பதில் சந்தேகமே இல்லை. பெற்றவர்களை தெய்வமாக நினைத்தவன் தான் இன்று புகழ் ஏணியில் ஏறி நிற்கின்றான் அவனுக்கு தாழ்வு கிடையாது.
'அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்'
    60-ம் வயது பூர்த்தியாகி 61-ம் வயது தொடங்கும் நாளில் (சஷ்டியப்த பூர்த்தி) ஜென்ம நட்சத்திரத்தில் தனக்குப் பிறந்த தலைமகனால் ஏற்று நடத்தப்படுவது. இதில் எத்தனை பிள்ளைகள் உள்ளனரோ அவர்கள் அனைவரும் சேர்ந்து நடத்திடவேண்டும். தலைமகன் தாலி வாங்க வேண்டும். மற்றவர்கள் சாப்பாடு, துணிமணிகள் எல்லாம் எடுத்து ஒற்றுமையாக நடத்திட வேண்டும்.
    அறுபதாங் கல்யாணம் என்பதும் சாதாரணக் கல்யாணம் போலவே செய்வார்கள். கோவிலிலோ, அல்லது மண்டபத்திலோ செய்யலாம். ஒரு தட்டில் அரிசி நிரப்பி அதில் மஞ்சள் பூசிய தேங்காயில் தாலியை வைத்துவிட வேண்டும். அப்போது வயதில் மூத்தவர்கள் தாலி எடுத்து கொடுக்க மணப்பெண்ணான தாயின் கையில் அரிசியும் தேங்காயும் இருக்க வேண்டும் (மாங்கல்யம் சிவனும் பார்வதியும் சேர்ந்தது) மணமகன் ஐயர் மந்திரம் சொல்ல தனது மனைவி கழுத்தில் தாலி கட்டுவார். மற்ற சடங்குகள் தேவையில்லை. பெரியவர் மாலை எடுத்துக்கொடுக்க இருவரும் மாலைமாற்றிக் கொள்ள வேண்டும். தனக்குப் பிறந்த பிள்ளைகள் கண்ணெதிரில் இந்த நிகழ்வுகள் நடப்பது கண்டு பெற்றவர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைப்பார்கள். கல்யாணம் முடிந்ததும் அவர்களைவிட வயதில், பெரியவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ள வேண்டும். ஆசீர்வாதம் வழங்கும்போது பெற்ற பிள்ளைகள் வயது வாரியாக ஒன்றன்பின் ஒருவராக ஒரு தாம்பாளத் தட்டில் அம்மாவின் வலதுகாலும் அப்பாவின் இடது காலையும் வைத்து தண்ணீர் விட்டுக் கழுவி சந்தனம் குங்குமம் வைத்து பின் தங்கத்திலான பூவும், வெள்ளியலான பூவும் மலர்களும் வைத்து சாஷ்டாங்கமாக விழுந்து பாத பூஜை செய்து கும்பிட வேண்டும் பின் பெற்ற பிள்ளைகளுக்கு தாய் தகப்பன் ஆசீர்வாதம் வழங்குவர்.

சதாபிஷேகம் (80வது பிறந்த நாள்)
    80-வது பிறந்த நாள் 60-வது பிறந்த நாள் மாதிரியே செய்ய வேண்டும்.
    80-வது வயது சதாபிஷேகம் நடத்துபவருக்கு கணவன், மனைவி இருவருக்கும் சேர்ந்து அந்த பாக்கியம் கிடைப்பது கடவுள் தந்த பரிசு அது எல்லோருக்கும் அமைவதில்லை.
    மேலே சொல்லியபடி இதுவும் பிள்ளைகள் சேர்ந்து நடத்தும் வைபோகம் தான் கூப்பிடாமலே அனைவரும் போய் கண்டு களித்து அவர்களிடம் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது பெரும்புண்ணியம் என ஒவ்வொருவரும் நினைக்க வேண்டும்.
    பிள்ளைகளே கடமையைச் செய்யுங்கள் பலன் தானே தக்க நேரத்தில் உங்களை வந்தடையும். பெற்றவர்களை உயிர் இருக்கும் போது உணவளித்து காப்பாற்றுங்கள். உயிர் போன பின் படையலும், ஆடம்பரமும் தேவையில்லை அவர்களின் எதிர்பார்ப்பு பாசமுடன் கலந்த அரவணைப்புதான்.

இறப்பு
    பிறப்பு என்பது எப்படி இயல்போ அதேபோன்று இறப்பும் இயற்கையின் நிகழ்வுதான் நூறாண்டு காலம் வாழ எத்தனிக்கும் ஒவ்வொரு மனித ஜீவனும் அவரவர் விதிப்படி தன்னுடைய இறப்பானது நிகழும் இது நம் கையில் இல்லை. எல்லாம் வல்லவனாய் இருக்கும் அவன் கையில் உள்ளது.
    இறந்துவிட்டார்கள் என்பதை மருத்துவர் மூலம் உறுதி செய்யப்பட்டபின்
பிணமான அந்த மேனியை குளிப்பாட்டி மாலை போட்டு நெற்றியில் விபூதியும் களபத்தினாலான பொட்டு வைத்து. கண்களுக்கும் களபம் சார்த்த வேண்டும். புதுத்துணி உடுத்த வேண்டும். பின் தெற்கு பக்கம் தலை இருக்குமாறு கிடத்த வேண்டும். கால்கள் இரண்டு பெருவிரலையும் சேர்த்துக் கட்டவேண்டும். தலைக்கருகில் விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். அதனருகில் குறைகுடம் வைத்து அதில் பூப்போட வேண்டும். நிறை நாளி நெல் தென்னம்பூ இளநீர் தேங்காய் பழம், ஊதுவத்தி கொழுத்தி வைக்க வேண்டும். இறந்தவரின் கைகளில் பின்னக்காய் எண்ணெய்யும் உப்பும் வைத்து மடக்கி மார்பு பக்கமாக கைகளை கட்டவும். மூக்குகளில் பஞ்சு வைக்கவும்.
    உற்றார் உறவினருக்கெல்லாம் துக்கச் செய்தி அனுப்பி அவர்கள் வந்தபின் நேரம் பார்த்து ஈமச்சடங்குகள் ஆரம்பிக்க வேண்டும்.
    ஈமக்கிரிகை செய்வோர் ஒருமண் சட்டியில் தீயினை எரியும் கொள்ளியினால் நிரப்பி வைப்பர். பச்சை தென்னை ஓலை முடைந்து பின் பாடையினை கட்டுவார்கள். வசதி படைத்தவர்கள் தேர்ப்பாடை கட்டி, அதில் பிணத்தை உட்கார வைத்து எடுத்துச் செல்வது வழக்கம்.
    சனிக்கிழமைகளில் இறந்தால் பாடையுடன் கோழி அல்லது முட்டை வைத்து அனுப்பவும்.
    கன்னியாகவோ, காளையாகவோ இறந்தால் வாய்கரிசி போடக்கூடாது. நெய்ப்பந்தம் கிடையாது.
நீர்மாலை
    இறந்தவரின் தலைமகன் குளத்தில் குளித்துவிட்டு தலையில் கெண்டியில் தண்ணீர் எடுத்து வந்து முதலில் பிணத்தை குளிப்பாட்ட வேண்டும். அதற்குமுன் பெயரன் பெயர்த்திகள் எண்ணெய் சீகக்காய் இடது கை பின்விரலால் தேய்க்க வேண்டும். அதன்பின் கெண்டியிலுள்ள தண்ணீரால் காலைச்சுற்றி முதலில் மனைவியும், பின் தலைப்பிள்ளையும் ஊற்றவும். குளிப்பாட்டி கிடத்த வேண்டும். இறந்தவரின் அத்தான் (மனைவியின் சகோதரன்) கோடி போடவேண்டும். நீர் மாலை எடுத்து வந்து இறந்தவரின் கழுத்தில் போட வேண்டும். மருமகன், அத்தான், கொழுந்தனார், மணமான உறவினர்கள் கோடி போட வேண்டும். பெண்கள் வாய்கரிசி போட பெயரன் பெயர்த்திகள் நெய் தீபம் ஏந்தி இறந்தவரின் சடலத்தை சுற்றிவர வேண்டும். கொள்ளி சாமான்கள் எல்லாம் இறந்தவரின் அத்தான் செய்ய வேண்டும். (ஆண்களுக்கு மனைவியின் முகூர்த்தப்பட்டு, போர்த்த வேண்டும்).
    பின் இறந்த உடலை வீட்டின் வெளியில் தயார் செய்யப்பட்ட பாடையில் கிடத்தி துணினால் செய்யப்பட்ட கயிற்றால் கட்டுவார்கள். இஷ்ட பந்துக்கள் நால்வர் பாடையினை தூக்க பாடைக்குமுன் தலைமகன் கொள்ளி சட்டியுடன் நடந்து மையானம் செல்வார்கள்.
    பூத உடல் வீட்டைவிட்டு நகர்ந்தவுடன் பெண்டிற்கள் ஓலமிட்டபின் வீட்டை கழுவி படுக்கவைக்கப்பட்ட பெஞ்சினை கவிழ்த்துவிட வேண்டும்.
    மயானம் சென்றடைந்தவுடன் ஆண்கள் வாய்க்கரிசி போட வேண்டும். பின் பூத உடலில் போர்த்தப்பட்ட பிறந்த வீட்டுக் கோடியினை ஒரு முனையில் சுட்டு சுருக்கி எடுத்து வீட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
    இறந்தவரின் தலைமகன் மண் (கூஜாவில்) தோண்டியில் தண்ணீர் எடுத்து ஈமக்கிரியை செய்பவர் கெண்டியில்; மூக்கால் துளையிட 3 முறை வலம் வரவேண்டும். பின்னர் உடலின் தலைமாட்டில் திரும்பி நின்று உடைத்து அதில் ஒரு துண்டில் (தண்ணீருடன் இருக்கும்) எடுத்து பூத உடலின் வாயில் ஊற்றவும் பின்னர் தகன மேடையில் குப்புற கவிழ்த்து பூத உடலை வைத்து எரியூட்டுவார்கள்.
    பின்னர் தலைமகன் முதற்கொண்டு எத்தனை பிள்ளைகளோ  அத்தனைபேரும் தலைமுடி எடுக்க வேண்டும். பின் குளித்துவிட்டு மையானக் கோவிலில் ஊர் பெரியவர்கள் அமர்ந்து காடாத்திற்கான நேரம் குறிப்பார்கள். ஈமக்கிரியை செய்தவர்களுக்கு பணம் பட்டுவாடா செய்தபின் திரும்பி பார்க்காமல் வீடு திரும்ப வேண்டும்.
    அன்று அந்தி நேரம் பருப்புநீர் செய்து முச்சந்தியில் ஒரு செரட்டையில் வைத்துவிட்டு பின்னர் எல்லோருக்கும் விநியோகம் செய்யவும்.
காடாத்து (பால்)
    குறித்த நேரத்தில் காலையில் உறவினர்களுடன் மையானத்தில் குழியிலுள்ள அஸ்தியினை சேகரித்து விட்டு இலையினை பரப்பி அதன் மேல் அஸ்தியினை வைத்து களபம், தயிர், பால், தேன், இளநீர் போன்றவற்றால்; அபிஷேகம் செய்து பின் சந்தனம் குங்கும் வைத்து தீப தூபம் காண்பித்து வணங்கி அதனை ஒரு பாத்திரத்தில் வைத்து துணியினால் மூடி வீட்டிற்கு எடுத்து வரவும்.
    வீட்டில் வைத்து பால் ஊற்றி, பூ, நாணயம் போடவும் எல்லோரும் வணங்கிவிட்டு  உடன் கடலில் சென்று கரைத்துவிட்டு திரும்பிப் பார்க்காமல் வீடு திரும்பவேண்டும். அன்று எல்லோருக்கும் மாவு இடித்து பரிமாற வேண்டும்.
கிழமை
    இறந்தவர்களுக்கு 3 அல்லது 5 கிழமைகள் நடத்திவிட்டு பின்னர் அடியந்திரம் என்னும் 16-ம் நாள் காரியம் நடத்த வேண்டும். இறந்தவர்களுக்கு, வியாழன் ஞாயிறு ஆகிய இரண்டு தினங்கள் உகந்தது. எனவே வியாழன், ஞாயிற்றுக் கிழமைகளில் இறந்தவருக்கு பிடித்தமான சாப்பாட்டுப் பொருட்கள் வைத்து அதனுடன் பயிறு அவித்து  படைத்து எல்லோருக்கும் கொடுக்கவும் (முதல் ஆச்சமுறை) 2-ம் ஆச்சமுறை கடலையும்,3-ம் ஆச்சமுறை பலகாரங்கள் வைத்து அழுது எல்லோருக்கும் பரிமாற வேண்டும். இந்த செலவுகளெல்லாம் பெயரன், பெயர்த்தி, மகன்கள் எல்லோரும் சேர்ந்து செய்வது நல்லது.
அடியந்திரம்
    வீட்டிற்கு வெள்ளையடித்து சுத்தம் செய்து பின் அடியந்திரத்தின் முந்தின நாள் கொழுக்கட்டை, பருப்பு நீர் சொந்த பந்தங்களுக்கு கொடுக்கவும், அடியந்திரத்தன்று அதிகாலை 3 மணிக்கு அப்பம், உளுந்து வடை படைத்து அழுதல் வேண்டும். அழுவது என்பது இதோடு முடிவடைந்துவிடும்.
    காலையில் குறித்த நேரத்தில் அய்யர் வீட்டில் வந்து அடியந்திர பூஜை ஆரமபிப்பார். ஈமக்கிரியை செய்பவர் இறந்தவர்களின் புதல்வர்களுடன் குளக்கரைக்குச் சென்று அடுப்புக் கூட்டி பற்ற வைத்து காய்கறிகள் போட்டு உப்பில்லாமல் சமைத்து அதனை அருகில் இறந்தவருக்கு படைக்க வேண்டி செங்கலால் செய்யப்பட்ட ஒரு பொம்மை வைத்து படைத்து குளத்தில் கரைத்துவிட்டு மொட்டையடித்து குளித்துவிட்டு வீட்டிற்கு வரவேண்டும். பின் அய்யர் செய்து வைத்த பிண்டத்தை எடுத்துக்கொண்டு குளத்தில் கரைக்க வேண்டும். கரைத்துவிட்டு வீடு திரும்புமுன் அய்யர் தர்பணத்திற்கு படைக்கப்பட்ட சாமான்களும் தட்சணையும் கொடுத்து அனுப்பிவிட வேண்டும்.
    பின் பிண்டம் கரைத்து வந்ததும் அவர்களை நன்மைக்கு இருத்துவர். இறந்தவருக்கு எத்தனை புதல்வர்களோ? அத்தனை பேரும் அமர வைத்து இஷ்ட பந்துக்கள் அவர்களுக்கு துணிமணிகள் பணம் கொடுப்பார்கள். பெற்றுக்கொண்டு எழுந்திரிக்க வேண்டும். பின் அனைவருக்கும் சாப்பாடு போடவேண்டும்.
ஆண்டு (திவஸம்)
    இறந்து ஒருவருடம் ஆனதும் அதேநாள் அதே தேதியில் அய்யர் வைத்து பூஜை செய்து இறந்தவருக்கு விருப்பப்பட்ட சாப்பாடு எல்லாம் செய்து விளக்கின் முன் 3 இலைகள் போட்டு படையல் போட்டு பூஜை செய்து பின் அனைவருக்கும் சாப்பாடு கொடுக்க வேண்டும்.
குறிப்பு : பொதுவாக நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் குடும்பங்களில் திருவிளக்கு (குத்து விளக்கு) என்பது எல்லோர் நடு வீட்டிலும் வைத்து திருவிளக்குதான்
பிரதான தெய்வமாக வணங்கப்பட்டு வந்தது. தற்காலங்களில் இது குறைந்து
வருகிறது. எனவே ஒவ்வொருவரும் இந்த பழக்கவழக்கத்தை தொடருமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன். வீட்டிற்கு ஐஸ்வர்யம்.

 
தொகுப்பு
திருமதி. கிருஷ்ணம்மாள் இராமச்சந்திரன்